கொட்டாம்பட்டி-கொட்டாம்பட்டி ஊராட்சி திருமண மண்டபத்தை பராமரிக்காமலும், மரங்களை அனுமதியின்றி வெட்டி கடத்தியதாகவும் ஊராட்சி நிர்வாகம் மீது புகார் எழுந்துள்ளது.
இம்மண்டபம் 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. முறையாக பராமரிக்காததால் மேல் தளத்தில் தண்ணீர் தேங்கி சிமென்ட் பூச்சுகள்பெயர்ந்து மண்டபம் சிதிலமடைந்து வருகிறது.
நுழைவு வாயிலில் இருந்த இரண்டு கதவுகளும் காணாமல் போய்விட்டன. இதனால் சமூக விரோதிகள் புகுந்து மது அருந்துகின்றனர். கால்நடைகளின் புகலிடமாகவும் மாறிவிட்டது.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
பொதுமக்கள் குறைந்த கட்டணத்தில் பயன்படுத்திய மண்டபத்தை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்கவில்லை. நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு மண்டபம் இல்லாமல் அவதிப்படுகிறோம். இம் மண்டப வளாகத்தில் இருந்த மரங்களை அனுமதியின்றி வெட்டுகின்றனர். வெட்டிய மரங்களை ஏலம் விடாமல், பணத்தை ஊராட்சி கணக்கிலும் வரவு வைக்காமல் முறைகேடு செய்துள்ளனர். சட்டத்தை கடைபிடிக்க வேண்டியவர்களே மீறியதுஅதிர்ச்சியாக உள்ளது, என்றனர்.
ஊராட்சி செயலர் சிவராமகிருஷ்ணன் கூறுகையில், ''மரத்தை வெட்ட தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். அனுமதியின்றி மரம் வெட்டியதும்,பணத்தை ஊராட்சி நிதியில் வரவு வைக்காததும் தவறு. மண்டபத்தை பராமரிக்க திட்ட மதிப்பீடு தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் பராமரிப்பு பணிகளை துவக்குவோம் என்றார்.