திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே ரோஸ்மியாபுரத்தை சேர்ந்தவர் பாஸ்கர். இவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் இருந்தனர். மகன் சிவன்ராஜ், பட்டதாரி வாலிபர். டிரைவர் உள்ளிட்ட பணிகளுக்கு சென்று வந்தார். சிவன்ராஜ் சில மாதங்களாக ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஆர்வம் காண்பித்தார். ஆரம்பத்தில் அதில் பணம் வரவு வந்தது. பின்னர் லட்சக்கணக்கில் இழந்தார். ஒரே மகன் கேட்கிறாரே என தந்தை பாஸ்கர் நிலங்களை விற்று ரூ. 15 லட்சம் வரை தந்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு நிலத்தை விற்க ரூ. 5 லட்சத்துக்கு விலை பேசி ரூ 1.5 லட்சம் அட்வான்ஸ் பெற்றுள்ளார். அதில் ரூ. ஒரு லட்சத்தை மகனுக்கு கொடுத்துள்ளார். அதனையும் சிவன்ராஜ் ரம்மி விளையாட்டில் இழந்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்டார். நேற்று முன்தினம் சகோதரியிடம் போனில் பேசிய சிவன்ராஜ் பின்னர் அங்கு தோட்டத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நாய் குரைத்ததால் மோதல்: பெண் பரிதாப பலி
உத்தர பிரதேசத்தில் பைரியா பகுதியில் லால் முனி, 50, என்ற பெண் வசித்து வந்தார். இவர் நேற்று முன் தினம் இரவு வீட்டருகே உள்ள சாலையில் நடந்து சென்றபோது, சிவ் சாஹர் பிந்த் என்பவரின் வீட்டில் வளர்க்கப்படும் நாய் குரைத்துள்ளது. இது பற்றி லால் முனி தன் குடும்பத்தினருடன் வந்து முறையிட்டபோது, சிவ் சாஹர் மற்றும் அவரது குடும்பத்தினர், உருட்டுக்கட்டைகளால் தாக்கினர்.
இதில் படுகாயம் அடைந்த அவர்களை, அக்கம் பக்கத் தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பரிசோதித்த டாக்டர்கள், லால் முனி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, லால் முனியின் மகன் அளித்த புகாரின்படி, சிவ் சாஹர், அவரது மகன் உட்பட மூவரை, போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளத்தில் தவறி விழுந்து 3 ராணுவ வீரர்கள் பலி
ஜம்மு - காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில், நம் ராணுவ வீரர்கள் இரவு, பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு, மச்சில் செக்டார் பகுதியில் உள்ள பாதையில் நேற்று முன்தினம் வழக்கமான ரோந்து பணியின்போது, அருகில் இருந்த பள்ளத்தில் தவறி விழுந்து, மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
விமான நிலையத்தில் சிறுநீர் கழித்த நபர் கைது
புதுடில்லியில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியின் ஆறாவது நுழைவு வாயில் அருகே, ஒரு நபர் சிறுநீர் கழித்ததுடன், பயணியருக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அந்நபரை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
அவர் பீஹாரைச் சேர்ந்த ஜவஹர் அலி கான், 39, என்பதும், மேற்காசிய நாடான சவுதி அரேபியா செல்ல விமான நிலையம் வந்தவர் என்பதும் தெரிய வந்தது. அவரை, மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் அழைத்து சென்றனர். அங்கு ஜவஹர் அலி கானை பரிசோதித்த டாக்டர்கள், அவர் குடிபோதையில் இருந்ததை கண்டறிந்தனர். இதையடுத்து, போலீசார் அவர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். எனினும், அவர் அன்றைய தினமே ஜாமினில் விடுவிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
ஐ.எஸ்., ஆதரவு பயங்கரவாதிகள் பெங்களூரில் கைது
ஐ.எஸ்., எனப்படும் சர்வதேச பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்ட இருவரை, கர்நாடக மாநிலம் பெங்களூரில், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் நேற்று அதிரடியாக கைது செய்தனர். இதில், மாசின் அப்துல் ரஹ்மான் மங்களூரைச் சேர்ந்தவர் என்பதும், நதீம் அஹமது, தாவணகெரே மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
நரபலி பயங்கரம்: சிறுவன் உட்பட மூவர் கைது
குஜராத் மாநிலம் அருகே உள்ள யூனியன் பிரதேசமான தாத்ரா - நாகர் ஹவேலியின் சாயிலி கிராமத்தைச் சேர்ந்த 9 வயது சிறுவன் கடந்த மாதம் 29ம் தேதி காணாமல் போனான். சில்வாசா போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுவனை தேடி வந்தனர். இந்நிலையில், சில்வாசாவில் இருந்து 30 கி.மீ., தொலைவில் உள்ள குஜராத்தின் வல்சாத் மாவட்டத்தின் வாபி என்ற இடத்தில், தலை இன்றி சிறுவன் உடல் கால்வாயில் கண்டெடுக்கப்பட்டது.
காணாமல் போன சிறுவனின் அடையாளத்துடன் அந்த உடல் ஒத்துப்போனதால், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதே நேரத்தில், சிறுவனின் சொந்த ஊரான சாயிலி கிராமத்தில், துண்டு துண்டாக வெட்டப்பட்ட மனித உடல் பாகங்கள் கிடைத்தன. அவற்றை உடற்கூராய்வு பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
வழக்கு விசாரணையில், தாத்ரா - நாகர் ஹவேலியில் கோழிக் கடையில் கறி வெட்டும் வேலை செய்யும் சிறுவனை போலீசார் கைது செய்தனர். அச்சிறுவன் கொடுத்த தகவலின் அடிப்படையில், சைலேஷ் கொக்கேரா மற்றும் ரமேஷ் சன்வார் என்ற இருவரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மூவரும் நிறைய பணம் கிடைக்கும் என்ற மூட நம்பிக்கையில் சிறுவனை கடத்தி, சாயிலி கிராமத்தில் வைத்து தலையை வெட்டி நரபலி கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது. பின், உடலை வாபியில் உள்ள கால்வாயில் வீசி எறிந்ததை ஒப்புக் கொண்டனர். கைதான சிறுவனை, சிறார் காப்பகத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
2 பெண்கள் படுகொலை: 46 சவரன் கொள்ளை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகேயுள்ள கண்ணங்கோட்டையைச் சேர்ந்த செல்லையா மனைவி கனகம், 65. இவர்களின் இளைய மகள் வேலுமதி, 35. கணவர் குமார் வெளிநாட்டில் இருப்பதால், தன் மகன் மூவரசன், 12, தாய் கனகம் ஆகியோருடன் வீட்டில் வசித்து வந்தார். வேலுமதியின் மூத்த சகோதரி மகளின் திருமணத்திற்காக நகைகள் வாங்கி, தாய் கனகம் வீட்டில் வைத்திருந்தனர்.
![]()
|
நேற்று முன்தினம் இரவு வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல், மூவரையும் அரிவாளால் வெட்டி, பீரோவில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றனர். வீட்டைச்சுற்றி மிளகாய் பொடியையும் துாவிச் சென்றனர். காலையில் அந்த வீட்டுக்கு வந்தவர், சிறுவன் மூவரசன் ரத்த காயத்துடனும், மகள் வேலுமதி பிணமாகவும், தாய் கனகம் படுகாயத்துடனும் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் இருந்த நான்கு பீரோக்கள் உடைக்கப்பட்டு 19 லட்சம் மதிப்புள்ள 46 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கனகம் இறந்தார். குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
பாரிஸ் ரயில் நிலையத்தில் கத்திக்குத்து
ஐரோப்பிய நாடான பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில், நேற்று காலையில் நுழைந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்தவர்களை கத்தியால் சரமாரியாக குத்தினார். இந்த தாக்குதலில், போலீஸ்காரர் உட்பட ஆறு பேர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து, கத்தியால் குத்திய நபரை அங்கிருந்த போலீசார் சுட்டனர். இதில், படுகாயமடைந்த அவர், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை அடிப்படையாக வைத்து, போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர்.