மேட்டுப்பாளையம், : குடிநீர் பிரச்னையை இரண்டு ஆண்டுகளாக, அதிகாரிகள் தீர்க்காததால், சின்னக்கள்ளிப்பட்டி ஊராட்சி தலைவர் (தி.மு.க.,) தலைமையில் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.
காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, சின்னகள்ளிப்பட்டி ஊராட்சி, கோவை மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் சின்னகள்ளிப்பட்டி, ரங்கம்பாளையம், கள்ளக்கரை, பெரியார் நகர், சண்முகாபுரம், தாசக்காளியூர், பள்ளர்பாளையம், நாதேகவுண்டன்புதூர் உட்பட, 12 சிறிய கிராமங்கள் உள்ளன. அவற்றிற்கு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் குடிநீர், விநியோகம் செய்து வருகிறது.
பவானி ஆற்றில் இருந்து எடுக்கும் தண்ணீர், சிட்டேபாளையம் அருகே, கோவில்மேட்டில் கட்டியுள்ள, சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்தம் செய்யப்படுகிறது. பின்பு இங்கிருந்து தனித்தனியாக, 9 ஊராட்சிகளில் உள்ள, 185 சிறிய கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது.
சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக, சின்னகள்ளிப்பட்டி ஊராட்சிக்கு, நிர்ணயம் செய்த குடிநீர் அளவு வழங்காததால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
இந்த நிலையில். குடிநீர் வடிகால் வாரிய நீரேற்று நிலையம் முன், சத்தி மெயின் ரோட்டில் சின்னக்கள்ளிப்பட்டி ஊராட்சி தலைவர் ரங்கசாமி தலைமையில் பொதுமக்கள் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு காரமடை பி.டி.ஓ., கோபால், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் சரவணன் ஆகியோர், ஊராட்சி தலைவர் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுகுறித்து ஊராட்சி தலைவர் ரங்கசாமி கூறுகையில், சின்னகள்ளிப்பட்டி ஊராட்சிக்கு, தினமும் ஒரு லட்சத்து, 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொடுக்க வேண்டும். ஆனால் அறுபதிலிருந்து, 70 ஆயிரம் லிட்டர் தண்ணீர் மட்டுமே கொடுக்கின்றனர். மேலும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பணியில் உள்ளவர்கள், முறைகேடாக தண்ணீரை விவசாயத்திற்கு திறந்து விடுகின்றனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால், சாலை மறியல் செய்தோம், என்றார்.
அதிகாரிகளும், ஊராட்சித் தலைவரும் சுத்திகரிப்பு நிலையத்தையும், தண்ணீர் வெளியே செல்லும் வாய்க்கால்களையும் ஆய்வு செய்தனர். அந்த தண்ணீர் அருகே உள்ள கிணற்றிலும், குட்டையிலும் தேங்கி இருப்பதையும், விவசாய நிலத்துக்கு தண்ணீர் செல்லும் பகுதிகளையும் பார்வையிட்டனர்.
பின்பு குடிநீர் சீராக வழங்குவதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து, ஊராட்சி தலைவர், பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சத்தியமங்கலம் ரோட்டில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.