காய்கறி, உடை, தின்பண்டங்கள், அலங்கார பொருட்கள், சமையல் பாத்திரங்கள், மளிகை, இறைச்சி என அத்தியாவசியம் முதல் ஆடம்பர பொருட்கள் வரை ஆன்லைன் வர்த்தகத்தில் வீடு தேடி வந்தடையும் வசதி அதிகரித்து வருகிறது.
இருந்தாலும் நேரில் சென்று கடைகளில் வாங்குவதற்கு இணையாக இவைகள் இருப்பதில்லை. அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் வசதி பழங்காலம் முதல் கிராமங்களில் உள்ள வாரச்சந்தைகள் மட்டுமே இத்தேவைகளை நிறைவேற்றுகிறது.
முன்னதாக பெரு நகரங்கள், முக்கிய கிராம சந்திப்புகளில் வாரந்தோறும் செயல்பட்டு வந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளால் உணவு, காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்களின் நேரடி விற்பனை நல்ல பலனை அளித்தது. இதனால் தற்போது குக்கிராமங்களிலும் வியாபாரிகள் கூடி வாரச்சந்தைகள் நடத்துவது வெகுவாக அதிகரித்துள்ளது.
உள்ளாட்சி அமைப்புகள், ஹிந்து அறநிலையத்துறை, தனியார் இடங்களில் இவை நடத்தப்படுகின்றன. சம்பந்தப்பட்ட அமைப்புகள் சார்பில் பராமரிப்புக்கென குறைந்தபட்ச கட்டண வசூலும் நடக்கிறது. ஆனால் வியாபாரிகள், வாடிக்கையாளர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் கிடைப்பதில்லை. மழைக்காலங்களில் சகதியான நிலையிலும் பொருட்கள் கடை விரிக்கப்படுகின்றன.
போதிய தெரு விளக்கு இல்லாமல் அரிக்கேன், லாந்தர், மண்ணெண்ணெய், சார்ஜர் விளக்குகளை கொண்டு இரவிலும் வியாபாரம் நடக்கிறது.
அதிக மக்கள் நடமாட்டம் உள்ள இங்கு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதில்லை. இச்சூழலை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி வியாபாரிகளிடமும் பிக்பாக்கெட் திருட்டு தாராளமாக நடக்கிறது. நெரிசலில் பலர் அலைபேசி , பணம், நகைகளை பறிகொடுத்து தவிக்கின்றனர்.இப்பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் மாவட்ட போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருப்பையா, ஆசிரியர், நெல்லுார்.