வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இரண்டாவது முறையாக அமைந்துள்ள மத்திய பா.ஜ., அரசின் கடைசி முழு நிதி நிலை அறிக்கை, பிப்., 1ல் தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் தயாரிப்பு முதல், அது தாக்கல் செய்யப்படும் வரை தகவல்கள் வெளியே கசியாமல் இருக்க, உச்சகட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நிதி அமைச்சகம் அமைந்துள்ள 'நார்த் பிளாக்' பகுதியில் முழு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு, சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதிகாரியாக இருந்தாலும் முழு சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு என, தனியாக சிறப்பு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் தயாரிப்பில் உள்ள பகுதியில், 'இன்டர்நெட்' சேவை முடக்கப்பட்டுள்ளது. 'புளூ டூத், பென்டிரைவ்' போன்ற சாதனங்களுக்கு அனுமதி கிடையாது.இங்கு, ஐ.பி., எனப்படும் மத்திய புலனாய்வு அதிகாரிகளும் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்தபின், பட்ஜெட் ஆவணங்கள், 'டிஜிட்டல்' மயமாக்கப்பட்டன.
![]()
|
எம்.பி.,க்களுக்கும் டிஜிட்டல் வாயிலாக பட்ஜெட் வழங்கப்படுகிறது. இதனால், 1,000த்துக்கும் குறைவாகவே பட்ஜெட் ஆவணங்கள் அச்சிடப்படுகின்றன.பட்ஜெட் ஆவணங்கள் அச்சிடும் பணி துவங்குவதை குறிக்கும் வகையில், வரும் 22ம் தேதி, 'அல்வா கிளறும்' நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதன் பின், பட்ஜெட் அச்சிடும் பணியில் உள்ளவர்கள், பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள அச்சகத்தில் இருந்து வெளியே செல்ல முடியாது; யாருடனும் தொடர்பு கொள்ள முடியாது.
பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிப்., 1 காலை 11:௦௦ மணிக்கு பார்லிமென்டில் தாக்கல் செய்கிறார். அதனால், அச்சிடப்படும் பட்ஜெட் ஆவணங்கள், அன்று காலை 9:45 மணிக்கு மிகுந்த பாதுகாப்புடன் அச்சகத்தில் இருந்து பார்லிமென்ட் எடுத்துச் செல்லப்படும்.