வடமதுரை--வெள்ளபொம்மன்பட்டியில் நீர்வழிப்பாதை அடைக்கப்பட்டதால் 5 விவசாய தோட்டங்கள் ,கிணறுகள் ஒரு மாதமாக நீரில் முழ்கிய நிலையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
இதை தொடர்ந்து நீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர் .
வேல்வார்கோட்டை ஊராட்சி வெள்ளபொம்மன்பட்டி கிராமத்தையொட்டி அரசு சார்பில் உருவாக்கப்பட்ட ஊருணி உள்ளது. இங்கு நீர் நிரம்பும் நிலையில் மறுகால் பாய்ந்து ஊராளிபட்டி குளத்திற்கு நீர் சென்றடைய வாய்க்கால் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் ரோடு புதுப்பித்தல் பணியின் போது இங்கிருந்த பாலத்தை மீண்டும் கட்டாமல் விட்டுள்ளனர்.
இந்நிலையில் டிசம்பரில் பெய்த மழையால் தனபால் பாசன குளம் நிரம்பி மறுகால் நீர் ஊருணிக்கு வந்தது. ஊருணி நிரம்பி வெளியேற வழியின்றி ரோட்டின் ஒரு பக்கமே நீர் நிரம்பி நிற்கிறது.
இதனால் பாலாமணி, மகாகிருஷ்ணன், தனபால், பிரவிகவுண்டர்,
முருகேசன் ஆகியோரின் தோட்டங்கள், கிணறுகள் நீரால் மூடி கிடக்கின்றன. இப்பிரச்னையில் தீர்வு கோரி டிச.28ல் ரோடு மறியல் அறிவித்தனர்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் 3 நாட்களில் நீரை வெளியேற்ற பணி துவங்கும் என்றனர். ஆனால் பணி ஏதும் நடக்கவில்லை. இதனால் மீண்டும் நேற்று மறியல் போராட்டத்திற்கு ஆயத்தமாகினர்.
அங்கு வந்த இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன், ஏ.பி.டி.ஓ., ரவிந்திரன், ஆர்.ஐ., ரஞ்சித், வி.ஏ.ஓ., தேன்மொழி சமாதானம் செய்து ,மண் அள்ளும் இயந்திரத்தை வரவழைத்து ஊராளிபட்டி ரோட்டோரம் பள்ளம் வெட்டி நீரை வெளியேற்றும் பணியை துவக்கினர்.
நீர் வெளியேற போராட்டத்தை கைவிட்டனர்.