பழநி--பூங்கா இருந்தும் உபகரணங்கள் இல்லாத நிலை, துார்வாரப்படாத சாக்கடை, குடிநீருக்கு சிரமம் என பழநி நகராட்சி 15 வது வார்டு மக்கள் பரிதவிக்கின்றனர்.
லட்சுமிபுரம், ஒம் சக்தி கோயில் தெரு, ராஜா நகர், கல்லுகுழி பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் ராஜா நகர் பகுதி பூங்காவில் உபகரணங்கள் பொருத்தப்படாமல் உள்ளன.
இதோடு இப்பகுதியில் பல ஆண்டுகளாக பழுதடைந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.
இதில் விஷபூச்சிகள் தஞ்சம் அடைகின்றன. இப்பகுதி நகரின் முக்கிய பகுதியாக உள்ளதால் அதற்கான வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
பராமரிப்பில்லா சாக்கடை
சாமி, அரசு போக்குவரத்து ஊழியர். லட்சுமிபுரம்: சாலையோரங்களில் மரங்களை வைக்க வேண்டும். சாக்கடை பல ஆண்டுகளாக மேம்படுத்த படாமல் உள்ளது.
சாக்கடையில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும். பாதாள சாக்கடை திட்டத்தையும் நடைமுறைப் படுத்த வேண்டும்.
தேவை தடங்கல் இல்லா குடிநீர்
தனலட்சுமி, குடும்ப தலைவி , ராஜா நகர் : ராஜா நகர் பகுதி புதிய குடிநீர் தொட்டியில் இருந்து குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். அப்போது தண்ணீர் தடங்கல் இல்லாமல் வேகமாக கிடைக்கும். குப்பை அகற்றுவது,கொசு மருந்து தெளிப்பதை முறைப்படுத்த வேண்டும்.
பஸ்களை நிறுத்துவதால் விபத்து
கிருபானந்தசிவன், ஓய்வு ஆசிரியர், லட்சுமிபுரம்: சாக்கடை ஆக்கிரமிப்புகளை அகற்றி புதிய சாக்கடைகளை கட்டவேண்டும். இ.எஸ்.ஐ .,ரோடு திண்டுக்கல் ரோடு சந்திப்பில் பஸ்களை நிறுத்துவதால் விபத்து அபாயம் ஏற்படுகிறது . பஸ்களை நிறுத்துவதை கண்காணிக்க வேண்டும்.
குடிநீருக்கு விரைவில் தீர்வு
கந்தசாமி, கவுன்சிலர், (நகராட்சி துணைத் தலைவர்) (மார்க்சிஸ்ட்) : ரூ.13.5 லட்சத்தில் மழை நீர் வடிகால், சிறு பாலம் கட்டும்பணிகள் துவங்கப்பட உள்ளது. குடிநீர் பிரச்னை விரைவில் தீர்க்கப்படும்.
படிப்பகம் திறக்க நகராட்சி தலைவருடன் பேசி உள்ளேன். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். லட்சுமிபுரம் குடிநீர் தொட்டியில் தண்ணீர் அழுத்தம் குறைவாக இருப்பதால் ராஜா நகர் குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கண்காணிப்பு கேமிராக்கள் அதிகம் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.