புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த 9 நாட்களில் 82 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தடுப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் ஒன்றிரண்டாக இருந்த டெங்கு காய்ச்சல் பாதிப்பு தற்போது அதிகரித்து வருகிறது.
கடந்த 9ம் தேதி வரை 82 பேருக்கு புதுச்சேரியில் டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து டெங்கு பாதிப்புள்ள பகுதிகளை கண்டறிந்து அங்கெல்லாம் கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கும் பணியை சுகாதாரத் துறை முடுக்கிவிட்டுள்ளது.
புதுச்சேரி அண்ணா சாலை திருமுடி நகரில் ஒருவருக்கு டெங்கு பாதிப்பு இருந்து சிகிச்சை பெற்று குணமடைந்ததை தொடர்ந்து அப்பகுதியில் தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய் தடுப்பு மைய உதவி இயக்குனர் வசந்தகுமாரி தலைமையில் ஒதியஞ்சாலை ஆரம்ப சுகாதார நிலைய குழுவினர் நேற்று முகாமிட்டு டெங்கு முன்னெச்சரிக்கை தடுப்பு பணியில் ஈடுபட்டனர்.
குடிநீர் தேக்க தொட்டி, கப், டயர்களில் இருந்த டெங்கு கொசு லார்வாக்களை கீழே கொட்டி அழித்தனர்.
தொடர்ந்து டெங்கு பாதிப்பின் அறிகுறிகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
உதவி இயக்குனர் வசந்தகுமாரி மழைக்காலங்களில் பரவும் நோய்களில் டெங்கு கொடியது. பொதுவாக டெங்கு சாதாரண காய்ச்சல் அறிகுறிகளுடன் தொடங்கும்.
சாதாரண காய்ச்சல்தான் என்று அசட்டையாக இருந்து விட்டால் பாதிப்பு அதிகமாகிவிடும். சுத்தமான தண்ணீரில் தான் டெங்கு கொசுக்கள் இனபெருக்கம் செய்கின்றன. டெங்கு காய்ச்சல் பரவுவதை தவிர்க்க சரியான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். டெங்கு கொசுக்கள் வீட்டின் உட்புற பகுதிகள், வீட்டை சுற்றியுள்ள நீர் நிலைகளில்தான் இனப்பெருக்கம் செய்யும்.
அதனால் வீட்டையும், சுற்றுப்புற பகுதிகளையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.