புதுச்சேரி : புதுச்சேரியில் கணவரோடு வாழ பிடிக்கவில்லை என கடிதம் எழுதி வைத்து விட்டு குழந்தைகளோடு சென்ற தாயை போலீசார் தேடி வருகின்றனர்.
லாஸ்பேட்டை, கொட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சண்முகம் மனைவி மலர்விழி. இவர்களின் மகள் சரண்யா,31; இவருக்கும், திலாஸ்பேட்டை, வீமன் நகரை சேர்ந்த ராம்குமார் என்பவருக்கும் கடந்த 2015ம் ஆண்டு திருமணமானது. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். ராம்குமார் சென்னையில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணி புரிந்துவருகிறார்.
சரண்யா தனது குழந்தைகளோடு லாஸ்பேட்டை, புதுப்பேட்டையில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில், சரண்யாவுக்கும், அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் சரண்யா மன உலைச்சலில் இருந்தார்.
கடந்த 9ம் தேதி மதியம் 3.30 மணிக்கு மலர்விழி தனது மகள் சரண்யாவிற்கு போன் செய்த போது சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. சந்தேகமடைந்த அவர், தனது மகள் வீட்டிற்கு சென்று பார்த்த போது அவரும், குழந்தைகளும் இல்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அப்போது வீட்டில் உள்ள டைரியில், சரண்யா எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று கிடைத்தது. அதில், தனது கணவரோடு வாழ விருப்பமின்றி, நிம்மதியாக வாழ குழந்தைகளோடு வீட்டை விட்டு செல்கிறேன் என எழுதியிருந்தார்.
இதுகுறித்து மலர்விழி அளித்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து காணாமல் போன சரண்யா மற்றும் இரு குழந்தைகளையம் தேடிவருகின்றனர்.