புதுச்சேரி : கல்லுாரி பேராசிரியர்கள், பதவி உயர்வு மற்றும் ஊதிய நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வேண்டி அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து முறையிட்டனர்.
அரசு கல்லுாரி பேராசிரியர்கள் நேற்று சட்டசபையில், கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து, நீண்ட நாட்களாக வழங்கப்படாமல் உள்ள பதவி உயர்வு, ஊதிய நிலுவைத்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மனு அளித்தனர்.
மனு விபரம்:
அரசு கல்லூரிகளில் 2002ம் ஆண்டு முதல் 2009 ம் ஆண்டுவரை மத்திய தேர்வாணையம் மூலம் தேர்வாகி பணியாற்றி வரும் துணைப் பேராசிரியர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை.
ஊதிய நிலுவைத் தொகை, வீட்டு வாடகைப்படி நிலுவைத் தொகை, வழங்கப்படவில்லை.
அடிப்படை ஊதியத்தில் ஒரு படிநிலை உயர்வுக்கு மட்டுமே ஆணை வழங்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த படிநிலை அடிப்படை ஊதியம் வழங்குவதிலும், பதவி உயர்வு வழங்குவதிலும் வேண்டுமென்றே காலம் தாழ்த்தப்படுகின்றது.
எனவே, துணைப் பேராசிரியர்களுக்கு 15 ஆண்டுகளாக வழங்க வேண்டிய நிலுவைத் தொகை மற்றும் பதவி உயர்வை உடனடியாக வழங்கிட உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் நமச்சிவாயம், இப்பிரச்னை குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க உயர்கல்வித்துறை சார்பு செயலர் மற்றும் இயக்குநருக்கு உத்தரவிட்டார்.