புதுச்சேரி : அரசு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் இட மாற்றல் உத்தரவை வரும் 1ம் தேதிவரை நிறுத்தி வைத்து மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி, காரைக்கால் அரசு துவக்கப் பள்ளிகளில் 2 ஆண்டு பணி முடித்த ஆசிரியர்கள் கடந்த 14ம் தேதி இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில், காரைக்காலில் இருந்து 124 பேர் புதுச்சேரிக்கும், புதுச்சேரியில் இருந்து 90 பேர் காரைக்காலுக்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது.
கல்வியாண்டின் நடுவில் இடமாற்றம் செய்யப்பட்டதால் கொந்தளிப்பு அடைந்த ஆசிரியர்கள், முதல்வர், கல்வி அமைச்சர், கல்வித்துறை அலுவலகங்களை முற்றுகையிட்டு வந்தனர்.
இந்நிலையில் இடமாற்றல் உத்தரவை எதிர்த்து புதுச்சேரி தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில் கடந்த 22ம் தேதி மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுவில், ஆசிரியர்களுக்கான இடமாற்றல் உத்தரவினை முறையாக பின்பற்றவில்லை. ஆசிரியர்கள் கல்வியாண்டில் நடுவில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்து இருந்தனர்.
இவ்வழக்கு கடந்த 4ம் தேதி மத்திய நிர்வாக தீர்பாயத்தில் ஜேக்கப், லதா பஸ்வராஜ் பட்னே ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அடுத்த மாதம் 1 ம் தேதி இவ்வழக்கினை ஒத்தி வைத்த மத்திய நிர்வாக தீர்ப்பாய அமர்வு, அதுவரை கல்வித் துறையின் இடமாற்றம் உத்தரவினை செயல்படுத்த கூடாது என்றும், மேலும் கல்வித் துறை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவின் நகல் நேற்று வெளியாகி உள்ளது.