விழுப்புரம் : இணைய வழியில் பகுதி நேர வேலை தருவதாகக்கூறி வாலிபரிடம் ரூ.1.84 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக, சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், வானுார் வட்டம் உப்புவேலுார் வாணியர் தெருவைச் சேர்ந்தவர் வேலாயுதம் மகன் விக்ரம், 23; படித்துவிட்டு வேலையின்றி உள்ளார். பகுதி நேர வேலை இருப்பதாக, மர்ம நபர் ஒருவர் இணையவழி லிங்க் ஒன்றை, விக்ரமின் மொபைல் எண்ணுக்கு, கடந்த 26.9.2022ல் அனுப்பியுள்ளார்.
விக்ரம், அந்த இணைய வழி லிங்க் மூலம் மர்ம நபரை தொடர்பு கொண்டு, பகுதி நேர வேலையை தொடங்கி உள்ளார். இப்பணிக்கு, ஒரு சிறிய தொகை அனுப்பினால், அதிக லாபமாக பெரிய தொகை அனுப்பி வைக்கப்படும் என மர்ம நபர் கூறியுள்ளார்.
இதனை நம்பிய விக்ரம், அவரது வங்கி கணக்கிலிருந்து, மர்ம நபரின் மொபைல் எண்ணிற்கு முதலில், 100 ரூபாய் செலுத்தி, ரூ.221 பெற்றுள்ளார். மற்றொரு நாள் 500 ரூபாய் செலுத்தி 1,254 ரூபாய் திரும்ப பெற்றுள்ளார்.
இதேபோல், 7.11.22 வரை பல தவணையில் 1 லட்சத்து 60 ஆயிரத்து 250 ரூபாய், நண்பர்கள் வெங்கடேஷ் வங்கி கணக்கிலிருந்து ரூ.3,840, சரச்சந்திரன் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.20,299 என, மொத்தம் 1 லட்சத்து 84 ஆயிரத்து 398 ரூபாயை, 28 தவணைகளில் அந்த மர்ம நபருக்கு அனுப்பி உள்ளார்.
தொடக்கத்தில் லாப தொகையாக சிறிய தொகை அனுப்பிய அந்த மர்ம நபர், அதன் பிறகு, அதிக தொகையை பெற்றுக்கொண்டு மோசடி செய்துள்ளார்.
ஏமாற்றப்பட்டதை உணர்ந்த விக்ரம், விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தார். சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பூங்கோதை, சப் இன்ஸ்பெக்டர் ரவிசங்கர் ஆகியோர், மோசடி பிரிவில் நேற்று வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.