விழுப்புரம் : தமிழக கவர்னரை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் கூறினார்.
விழுப்புரத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது;
தொன்மை வாய்ந்த திருவக்கரை கல்மரம் பூங்காவை மத்திய அரசு முழுமையாக தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள சட்ட மசோதா இயற்றியுள்ளது. இதற்காக பொதுமக்களிடம் கருத்து கேட்டுள்ளது.
திருவக்கரை மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள தொன்மை வாய்ந்த புவியியல் வளங்களை முழுமையாக எடுத்து 'ஜியோ ஹெரிடேஜ்' என மாற்றும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதற்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கிறேன். தமிழக அரசும் தனது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.
தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பல கோவில்கள் பராமரிப்பின்றி பாழாகி கிடக்கின்றன. அதே நிலை தான் இதற்கும் ஏற்படும்.
தமிழகம் என்றால் மத்திய அரசு பாராமுகம் காட்டுகிறது. தமிழக கவர்னர் மத்திய அரசு மற்றும் பா.ஜ.,வின் முகவராக செயல்பட்டு வருகிறார். அரசியலமைப்பு சட்டத்தினை அவமதிக்கும் செயலாக அவரின் செயல்பாடுகள் உள்ளன.
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தி, அமைதியை சீர்குலைத்து வளர்ச்சியை தடுப்பது தான் பா.ஜ.,வின் நோக்கம். அதற்காகத் தான் கவர்னரை பயன்படுத்துகின்றனர். தமிழக மக்கள் மத்தியில் மிகப்பெரிய எழுச்சி கவர்னரால் ஏற்பட்டுள்ளது.
கவர்னரின் செயல் தீவிரவாத செயல். அவர் கவர்னர் பதவியில் நீடிக்க எந்த தகுதியும் இல்லை. கவர்னரை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு எம்.பி., ரவிக்குமார் கூறினார்.