உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டையில் நேற்று நடைபெற்ற வாரச் சந்தையில் ரூ.2 கோடி மதிப்பில் ஆடுகள் விற்பனை ஆனது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டையில், சேலம் சாலையில் உள்ள ஏரி பகுதியில் புதன்கிழமைதோறும் ஆடுகள் விற்பனைக்காக வாரச் சந்தை நடைபெறும்.
இந்த சந்தைக்கு உளுந்துார்பேட்டை பகுதி மட்டுமன்றி, தியாகதுருகம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலுார், மடப்பட்டு, பண்ருட்டி, விழுப்புரம், செஞ்சி என பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருவர். பண்டிகை காலங்களில் ஆடுகளின் விற்பனை அதிகமாக இருக்கும்.
அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று உளுந்துார்பேட்டை ஆட்டு வார சந்தைக்கு அதிகளவில் ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. வியாபாரிகளும் அதிக அளவில் வந்திருந்தனர்.
இதனால் வழக்கத்துக்கு மாறாக ஆடுகளின் விலை நேற்று உயர்ந்தது. குறைந்த பட்சமாக ஒரு ஆடு ரூ. 4 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரத்துக்கும் மேல் விற்பனை செய்யப்பட்டது.
நேற்றைய வாரச் சந்தையில் ரூ. 2 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடந்தது.