வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோல்கட்டா: இந்தியா, இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி கோல்கட்டாவில் நடக்கிறது. 'டாப்-3' பேட்டர்கள் மீண்டும் அசத்தும் பட்சத்தில் இந்திய அணி தொடரை கைப்பற்றலாம்.
இந்தியா வந்துள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. கவுகாத்தியில் நடந்த முதல் போட்டியில் வென்ற இந்தியா 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி இன்று கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது.
பேட்டிங் நம்பிக்கை
இந்திய அணிக்கு காயத்தில் இருந்து மீண்ட கேப்டன் ரோகித் சர்மா (83 ரன்), சுப்மன் கில் (70) ஜோடி நல்ல துவக்கம் தருகிறது. 2014ல் இம்மைதானத்தில் இலங்கைக்கு எதிராக 264 ரன் விளாசி சாதித்தார். 2020க்குப் பின் ஒருநாள் அரங்கில் சதம் அடிக்காத ரோகித் மீண்டும் மிரட்டலாம்.
சர்வதேச அரங்கில் 2019, நவ. 23க்குப் பின் 1019 நாள் ஒரு சதமும் அடிக்காமல் இருந்தார் கோஹ்லி. 2022, செப். 8ல் ஆசிய கோப்பை தொடரில் சதம் (122, எதிர்-ஆப்கன்) விளாசினார். அடுத்து சாட்டோகிராம் (113), கவுகாத்தி (113) போட்டிகளில் சதம் அடித்த கோஹ்லியின் அசத்தல் இன்றும் தொடர வேண்டும்.
ராகுல் பலமா
'மிடில் ஆர்டரில்' ஸ்ரேயாஸ் நம்பிக்கை தருகிறார். விக்கெட் கீப்பராகவும் செயல்படும் லோகேஷ் ராகுல் மட்டும் சொதப்புகிறார். இவருக்கு மாற்றாக இஷான் கிஷான் காத்திருக்கிறார். தவிர 'ஆல் ரவுண்டர்' ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல் ரன் வேட்டைக்கு கைகொடுக்கின்றனர்.
![]()
|
உம்ரான் 'வேகம்'
வேகப்பந்து வீச்சில் முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக் கூட்டணி மீண்டும் தொடரும். இதில், துவக்க ஓவர்களில் சிராஜும், 'மிடில்' ஓவர்களில் உம்ரான் 'வேகமும்' மிரட்டுகிறது. சுழலில் சகால் இடத்தில் இன்று குல்தீப் இடம் பெறலாம்.
ஷானகா அபாரம்
இலங்கை அணியின் பேட்டிங்கில் நிசங்கா, தனஞ்செயா ரன் குவிப்புக்கு உதவுகின்றனர். அவிஷ்கா, குசல் மெண்டிஸ், அசலங்கா இன்று சுதாரித்துக் கொள்ளலாம். 108 ரன் எடுத்த கேப்டன் ஷானகா, தனி ஒருவராக போராடுகிறார். அணியின் பீல்டிங் முன்னேற்றம் அடைய வேண்டும். அறிமுக வாய்ப்பு பெற்ற வேகப்பந்து வீச்சாளர் மதுஷாங்கா, தோள்பட்டை காயத்தால் அவதிப்படுவது, ரஜிதா, 'ஆல் ரவுண்டர்' ஹசரங்கா, வெல்லாலகே ரன்களை வாரி வழங்குவது அணிக்கு சிக்கல் தருகிறது.
94 வெற்றி
இந்தியா, இலங்கை அணிகள் 163 ஒருநாள் போட்டிகளில் மோதின. இதில் இந்தியா 94, இலங்கை 57ல் வென்றன. ஒரு போட்டி 'டை' ஆனது. 11 போட்டிகளுக்கு முடிவில்லை.
* கடைசியாக மோதிய 13 போட்டிகளில் இந்தியா 11, இலங்கை 2ல் வென்றன.
மழை வருமா
இரண்டாவது ஒருநாள் போட்டி நடக்கும் கோல்கட்டாவில் வானம் மேகமூட்டம் இல்லாமல் தெளிவாக காணப்படும். மதியம் 1:00 மணி முதல் மழை வர அதிகபட்சம் 4 சதவீதம் மட்டுமே வாய்ப்புள்ளது.