வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: கவர்னர் மாளிகையில், இன்று(ஜன.,12) நடக்கும் பொங்கல் விழாவில் பங்கேற்க, முதல் முறையாக விவசாயிகள், அனைத்து மதத் தலைவர்கள் என, 1,800க்கும் மேற்பட்டோருக்கு, அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.
கவர்னர் மாளிகையில், ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழா நடக்கும். இவ்விழாவில் பங்கேற்க, முதல்வர், அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள், நீதிபதிகள் ஆகியோருக்கு அழைப்பிதழ் அனுப்பப்படும்.
இம்முறை முதல் முறையாக, கவர்னர் ரவி உத்தரவின்படி, ஆதீனங்கள், கிறிஸ்தவ பிஷப்புகள், முஸ்லிம் மத குருமார்கள், விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த வீரர், வீராங்கனையர், விவசாயிகள், தமிழ் ஆர்வலர்கள், சமூக வலைதள பிரபலங்கள், பழங்குடியின மாணவர்கள், சிறப்பாசிரியர்கள், பிரதமரின் 'மங்கிபாத்' நிகழ்ச்சியில், பிரதமரால் பாராட்டப் பட்டவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் போன்றோர் அழைக்கப்பட்டு உள்ளனர்.
![]()
|
விழாவில், கரகாட்டம், சிலம்பாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம், காவடி ஆட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் என, தமிழகத்தின் கிராமிய கலைஞர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. உடல் நலம் பேணும், 22 வகையான பாரம்பரிய உணவு வகை விருந்துடன் நிகழ்ச்சி நடக்க உள்ளது.