தஞ்சாவூர் : பொங்கல் பண்டிகையை ஒட்டி, வாழைத்தார்களுக்கு நல்ல விலை கிடைப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு, கண்டியூர், வளப்பக்குடி, வடுகக்குடி, ஆச்சனுார் ஆகிய பகுதிகளில், 250 விவசாயிகள் வாழை சாகுபடி செய்கின்றனர்.
சென்னை, திருச்சி, சேலம், விழுப்புரம், கரூர், தேனி, மற்றும் பல மாவட்டங்களுக்கு, இங்கிருந்து வாழைத்தார் மற்றும் இலைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
பொங்கல் பண்டிகையை ஒட்டி, பூவன் ரக வாழைத்தார் அறுவடை முழு வீச்சில் நடந்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் 300 ரூபாய்க்கு விற்பனையான வாழைத்தார், தற்போது, 600- ரூபாய் வரை விற்பனையாகிறது.மேலும், விளைச்சலும் அதிகளவில் உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து, வடுகக்குடி வாழை விவசாயி மதியழகன் கூறியதாவது:
சமீபத்தில் வீசிய புயல், டெல்டா மாவட்டங்களை தவிர்த்த, வட மாவட்டங்களில் வீசியதால், அங்கு வாழை சாகுபடி பெரியளவில் பாதித்தது.
இதனால், வட மாவட்டங்களில் வாழைத்தாருக்கான தேவை அதிகமாக உள்ளது.
தற்போது, திருவையாறு பகுதியில், ஒரு நாளைக்கு 10 ஆயிரத்திற்கும் அதிகமான வாழைத்தார்கள் அறுவடை செய்யப்பட்டு, வெளியூர்களுக்கு அனுப்பி வருகிறோம். விளைச்சல் நன்றாக உள்ளது. உரிய விலையும் கிடைத்துள்ளது.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.