சென்னை : கொரோனா தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் வந்த நிலையில், முதல் முறையாக பிரெஞ்ச் பயணியர் கப்பல், சென்னை துறைமுகம் வந்து, நேற்று இலங்கை புறப்பட்டுச் சென்றது.
எம்.வி.லீசெம்லைன் என்ற பிரெஞ்ச் பயணியர் கப்பல், இலங்கை, திரிகோணமலையில் இருந்து, கடந்த 10ம் தேதி, சென்னை துறைமுகம் வந்தடைந்தது. இதில், 113 கப்பல் சிப்பந்திகளும், 108 பயணியரும் இருந்தனர்.
கொரோனா தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் வந்த நிலையில், பயணியர் கப்பல் சென்னை வந்துள்ளது. இதில் வந்த பயணியர், நேற்று சென்னையில் உள்ள கோட்டை மியூசியம், சாந்தோம் சர்ச், கபாலீஸ்வரர் கோவில், தக் ஷிண் சித்ரா ஆகிய இடங்களுக்குச் சென்று பார்வையிட்டனர். இக்கப்பல் நேற்று மீண்டும் இலங்கை புறப்பட்டு சென்றது. கொரோனா தாக்கம் குறைந்த நிலையில், வரும் காலங்களில் இதுபோன்ற நிறைய சுற்றுலா கப்பல்களை ஈர்க்க, சென்னை துறைமுகம் தயாராக உள்ளதாக, நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.