உலக கோப்பை ஹாக்கி போட்டி துவங்க உள்ள நிலையில், 1971 கோப்பையில் ஜம்மு காஷ்மீரை, பாகிஸ்தானில் இருப்பது போன்று உலக வரைபடம் பொறிக்கப்பட்ட சம்பவத்தை ஹாக்கி ஆர்வலர்கள் இன்றும் நினைவு கூறுகின்றனர்.
நம் நாட்டின் தேசிய விளையாட்டான ஹாக்கி போட்டியின் தாக்கம் நீலகிரி மாவட்டத்தில் அதிகமாக உள்ளது. உலக கோப்பை ஹாக்கி போட்டி நாளை(13ம் தேதி) முதல், 30ம் தேதி வரை ஒடிசா மாநிலம், ரூர்கேலா, புவனேஸ்வர் நகரங்களில் நடக்கிறது. கடந்த, 1971ல் நடந்த உலக ஹாக்கி போட்டி வெற்றி கோப்பையில், ஜம்மு காஷ்மீரை, பாகிஸ்தானில் இருப்பது போன்று உலக வரைபடத்தை மாற்றி அமைத்த சம்பவம், ஹாக்கி ஆர்வலர்கள் மத்தியில் இன்றும் நினைவு கூறப்படுகிறது.
இதுகுறித்து, ஹாக்கி நீல்கிரீஸ் அமைப்பின் தலைவர், குன்னுாரை சேர்ந்த அனந்தகிருஷ்ணன் கூறியதாவது:
உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டி, 1971ல் முதன் முறையாக துவக்கப்பட்டு பார்சிலோனோ நகரில் நடந்தது. அப்போது, பாகிஸ்தான் ஹாக்கி குழும தலைவர் ஏர் மார்ஷல் நுார்கான், இந்த கோப்பையின் மீது இருந்த உலக வரைபடத்தில், ஜம்மு காஷ்மீர், பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருப்பது போன்று சித்தரிக்கப்பட்டிருந்தது. அந்த போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் முறையாக வென்றது.
கடந்த, 1975ல் இந்திய அணி கோப்பையை வென்றபோதும், கோப்பை மீதான வரைபடத்தில் இதே நிலை நீடித்தது. 2016ம் ஆண்டு இந்திய ஹாக்கி குழும தலைவர் டாக்டர் நரேந்திர் பத்ரா, சர்வதேச ஹாக்கி சம்மேளன தலைவராக பொறுப்பேற்றவுடன், இந்த கோப்பையின் மீது பொறிக்கப்பட்டுள்ள வரைபடத்தை மாற்றி அமைக்க வலியுறுத்தினார்.
'திருத்தப்படாத உலக வரைபடத்துடன் இந்த கோப்பை இருக்குமேயானால், சர்வதேச ஹாக்கி அமைப்பின் தலைமை இடத்தில் இருந்து கோப்பை கொண்டுவரப்படும். இந்த கோப்பைக்கு இந்திய அரசின் சுங்க அதிகாரிகள் அனுமதி கொடுப்பதை நானே முன்னின்று எதிர்ப்பேன்' என, எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து, கோப்பையில் உலக வரைபடம் திருத்தம் செய்யப்பட்டு, 2018ம் ஆண்டு போட்டியிலும் சரியாக காட்சிபடுத்தப்பட்டது.
இவ்வாறு, அவர் கூறினார்.
- -நமது நிருபர்--