திருப்பூர் : ஆதார் இணைப்பு பணியை வேகப்படுத்தும் வகையில், வீடு வீடாக சென்று விவரங்களை சேகரிக்க மின்வாரிய அலுவலர் மற்றும் பணியாளர் களமிறங்கியுள்ளனர்.
தமிழகத்தில் மானிய உதவி பெறும் மின் இணைப்புகளுடன் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம், ஆதார் இணைக்க அவகாசம் வழங்கியும், 50 சதவீதம் கூட இலக்கை அடைய முடியவில்லை. வேறு வழியில்லாமல், வரும், 31ம் தேதி வரை, ஆதார் இணைக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மின்வாரிய அலுவலகங்களில், ஆதார் இணைப்பு முகாம் நடத்தப்படுகிறது.
ஆன்லைன் மூலம் ஆதார் விவரம் இணைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், மக்களிடையே ஆர்வம் குறைவாக இருப்பதால், மின் கட்டணம் வசூலிக்கும் பணியாளர் நீங்கலாக, அனைத்து பிரிவு அலுவலர்கள், பணியாளர்களும், வீடு வீடாக சென்று ஆதார் நகல்களை சேகரிக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில்,'வீடு வீடாக சென்று ஆதார் நகல், இணைப்பு எண் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டு, உடனுக்குடன் ஆதார் இணைக்கப்படுகிறது.
ஆதார் இணைக்கவில்லையேல், 31ம் தேதிக்கு பிறகு மின் கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்படும் என, அனைவரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்' என்றனர்.