ஊட்டி : ஊட்டி அவலாஞ்சி பகுதியில் கடும் உறைபனி பொழிவு காரணமாக வெப்பநிலை 'ஜீரோ டிகிரி' செல்சியசாக மாறியது.
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் உறைபனி தாக்கம் அதிகரித்துள்ளது. நேற்று குறைந்தபட்ச வெப்ப நிலை, 3 டிகிரி செல்சியஸ் ஆகவும், அதிகபட்சம், 23 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவானது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான, அப்பர் பவானி, அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளை கம்பளம் விரித்தாற்போல் உறைபனி படர்ந்து காணப்பட்டது. குறைந்தபட்ச வெப்பநிலை 'ஜீரோ டிகிரி' செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை டீன் கூறுகையில்,''இந்த காலநிலையில் வெம்மை ஆடைகள் பயன்படுத்த வேண்டும். குளிர்ந்த நீரை குடிக்க கூடாது. குழந்தைகளை பாதுகாப்புடன் பெற்றோர் கவனிக்க வேண்டும்,'' என்றார்.
தமிழ்நாடு வேளாண் பல்கலை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி ஜெயபாலகிருஷ்ணன் கூறுகையில்,''ஊட்டியை பொறுத்தவரை நவ., இரண்டாவது வாரம் முதல் பிப்., இரண்டாவது வாரம் வரை குளிர்காலமாக இருக்கும். தெளிவான வானம், காற்றின் வேகம் குறைவாக இருந்ததால் கடந்த நான்கு நாட்களாக உறைபனி தாக்கம் அதிகரித்துள்ளது. பொங்கல் வரையும் உறைபனி தாக்கம் இருக்கும். பொங்கலுக்கு பின், படிப்படியாக குறைந்து வெப்பநிலை அதிகரிக்க கூடும்,'' என்றார்.