திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் கொடுக்கல் வாங்கல் தகராறில், டைலரை கொன்ற நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை அடுத்த நல்லவன்பாளையத்தை சேர்ந்தவர் டைலர் ஆறுமுகம், 54; இவர், கடந்த, 7ல் இரவு, 10:00 மணியளவில் வீட்டிற்கு பைக்கில் சென்றபோது, நான்கு பேர் கும்பல் அவரை கத்தியால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பியது. திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதில், டைலர் ஆறுமுகம், வரகூர் கிராமத்தை சேர்ந்த பரந்தாமன், 40, என்பவருக்கு, 3.50 லட்சம் ரூபாயை கடனாக ஓராண்டுக்கு முன் கொடுத்துள்ளார். அதை ஆறுமுகம் திரும்ப தருமாறு பரந்தாமனிடம் கேட்டார். பணம் திருப்பதித்தர மறுத்த அவர், வரகூரை சேர்ந்தவர் பாரதி, 22, சாலையனுாரை சேர்ந்தவர் தமிழரசன், 20, திருவண்ணாமலையை சேர்ந்தவர், ஸ்ரீகாந்த் 20, ஆகியோருடன் சேர்ந்து, டைலர் ஆறுமுகத்தை கொலை செய்துள்ளார். இதன்படி போலீசார் நேற்று, நான்கு பேரையும் கைது செய்தனர்.