லாஸ் ஏஞ்சல்ஸ் : 'ஆர்.ஆர்.ஆர்.,' திரைப்படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு...' பாடல் சிறந்த திரை இசைப் பாடலுக்கான பிரிவில் 'கோல்டன் குளோப்' விருதை வென்றுள்ளது.
திரைப்பட இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் தெலுங்கு, தமிழ், ஹிந்தி உட்பட பல்வேறு மொழிகளில் வெளியான ஆர்.ஆர்.ஆர்., திரைப்படம் சர்வதேச அளவில் வெற்றி பெற்றது. இப்படம் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் 'ஹாலிவுட் வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் சங்கம்' ஆண்டுதோறும் அளிக்கும் கவுரமிக்க கோல்டன் குளோப் விருதுக்கு ஆர்.ஆர்.ஆர்., திரைப்படம் இரண்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது. சிறந்த ஆங்கிலம் அல்லாத மொழி திரைப்படம் மற்றும் சிறந்த திரை இசைப்பாடல் ஆகிய பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது. இந்த பாடலுக்கு இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்துள்ளார்.
சந்திரபோஸ் பாடல் வரிகளை எழுத கால பைரவா மற்றும் ராகுல் சிப்லிகஞ்ச் ஆகியோர் பாடியுள்ளனர். நடிகர்கள் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர்., நடனமாடி உள்ளனர். ப்ரேம் ரக் ஷித் என்பவர் நடனம் அமைத்துள்ளார்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில், இயக்குனர் ராஜமவுலி, இசையமைப்பாளர் கீரவாணி, படத்தின் கதாநாயகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்., உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர். சிறந்த ஆங்கிலம் அல்லாத மொழி திரைப்படப் பிரிவில் ஆர்.ஆர்.ஆர்., விருதை தவறவிட்டது. இந்த பிரிவில் தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவைச் சேர்ந்த திரைப்படமான அர்ஜென்டினா 1985 விருதை வென்றது.
சிறந்த திரை இசைப்பாடலுக்கான பிரிவில் ஆர்.ஆர்.ஆர்., திரைப்படத்தில் இடம்பெற்ற, 'நாட்டு நாட்டு...' பாடல் விருதை வென்றது. படக்குழுவினர் ஆர்ப்பரிக்க இசையமைப்பாளர் கீரவாணி மேடை ஏறி விருதை பெற்றுக் கொண்டார். இவர் மரகதமணி என்ற பெயரில் தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். கீரவாணிக்கு பல்வேறு துறையினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் 'பாடலை இசையமைத்தவர் இயக்கியவர் நடனம் அமைத்தவர் நடித்தவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த மதிப்புமிக்க கவுரவம் இந்தியர்கள் ஒவ்வொருவரையும் பெருமை கொள்ளச் செய்துள்ளது' என, குறிப்பிட்டுள்ளார்.
'ஸ்லம்டாக் மில்லியனர்' என்ற பிரிட்டன் நாட்டு திரைப்படத்தில் இசையமைத்தற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 2009ல் கோல்டன் குளோப் விருது வென்றார். ஆனால் ஒரு நேரடி இந்திய படம் இந்த விருதை வெல்வது இதுவே முதல்முறை.