இதுவரை எந்த ஆண்டும் கண்டிராத வகையில், உலகளாவிய புவி வெப்பமயமாதலின் அளவீடு, 58 ஜிகா டன்களாக (GT) அதிகரித்துள்ளது.
இதுநாள்வரைப் பதிவான அளவீடுகளில், இதுவே அதிகபட்சமானது. இதே நிலை தொடர்ந்தால், வரும் 2030 இல், இது 62 ஜிகா டன்களாக உருவெடுத்து பெரும் ஆபத்திற்கு வித்திடும்.
எனவே இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில், உலக நாடுகள் பலவித வழிகளை முன்னெடுத்து வருகின்றன. பொருட்களை மறுசுழற்சி செய்வதென்பது புவி வெப்பமயமாதலைத் தடுப்பதற்கான முக்கிய வழி. அதில் சற்று புதிதாக, மனித உடல்களை உரமாக மாற்ற நியூயார்க் அரசாங்கம் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த 2019 இல், முதன்முதலாக அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் இந்த நடைமுறை சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. இதனையடுத்து கொலராடோ, ஓரிகான், வெர்மான்ட், கலிபோர்னியா ஆகிய நாடுகள் இதனைப் பின்பற்றியது. தற்போது நியூயார்க் மாநில ஆளுநர், கேத்தி ஹோச்சுல் இதனை அனுமதித்ததனை தொடர்ந்து, உடல்களை உரமாக மாற்றும் நாடுகளில் ஆறாவதாக நியூயார்க் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் ஒருவர் இறந்தபின், அவருடைய உடலானது மண்ணாக மாற்றப்படும். இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லை.
அதற்கு முதலில், இறந்தவரின் உடலைப் பரிசோதனைக்கு அனுப்பிச் சான்றிதழ் பெறுவர். பின்னர், உடலை ஒரு பெரிய பெட்டியில் வைத்து அதில் மரக்கட்டைகள், குதிரை மசால் புல், வைக்கோல் போன்ற இயற்கைப் பொருட்களை கொண்டு நிரப்பி, அதனுள் உடலை வைத்து மூடி விடுவர்.
பேட்டரி, பேட்டரி சார்ந்த பொருட்களோ அல்லது ரேடியோ கதிர்வீச்சுகளை வெளியிடும் சாதனங்களோ உபயோகப்படுத்தாமல் இயற்கை முறையிலேயே உடல் உரமாக்கப்படுகிறது
நுண்ணுயிர்களின் செயல்பாடுகள் தொடங்கிய பின், ஒரு மாத காலம் இதற்காக காத்திருக்க வேண்டும். இந்த கால இடைவெளியில், அதில் தொற்று ஏற்பட்டு விடாமல் இருக்க வெப்பமூட்டல் செயல்முறை நடைபெறும். அதன் பிறகு உடலானது மண்ணாக மாறி இருக்கும்.

இந்த மண்ணின் சிறுபகுதியை இறந்தவரின் உறவினர்களுக்கு கொடுத்துவிட்டு, பின்பு விவசாயத்துக்கு உரமாகப் பயன்படுத்துகின்றனர்.
உடலை எரித்தல், அடக்கம் செய்தல் போன்றவற்றால் ஆண்டுக்கு டன் கணக்கில் கார்பன் கழிவுகள் வெளியேறுகின்றன. எனவே அதனை கட்டுப்படுத்துவதற்கு உரப்படுத்துதல் முறை மாற்றாக அமையும், என மனித உடலை உரமாக்கும் செயல் முறையில் ஈடுபட்டுள்ள ரிகம்போஸ் எனப்படும் அமெரிக்க நிறுவனம் கூறுகிறது.
ஒருபுறம் இது பொருளாதார வகையிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் சிறந்த வழியாக இருக்கும் என இதனை ஆதரிப்பவர்கள் கூறுகையில், மறுபுறம் இதுபோல் மனித உடல்களை குப்பை போல கையாளக் கூடாது, என்று நியூயார்க்கில் உள்ள கத்தோலிக்க பாதிரியார்கள் எதிர்ப்புக் குரலையும் எழுப்புகின்றனர்.

சமீப காலமாக, ஸ்வீடன் தங்கள் நாட்டை கழிவுகள் இல்லாத நாடாக மாற்ற வேண்டும் என்ற முயற்சியை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது. அதன்படி ஸ்வீடனில் 47% கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன.
வெறும் 47% கழிவுகளை வைத்து பெரும்பாலான தேவைகளை நிவர்த்தி செய்து வருகிறது. எனவே ஸ்வீடன் போன்ற குப்பைகளை ஆக்கபூர்வமாக கையாளக்கூடிய, நாடுகளில் கூட மனித உடலை உரமாக்கும் முறை முன்பில் இருந்தே சட்டபூர்வமாக உள்ளது.