தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: தமிழக சட்டசபை விதிகள், அத்தியாயம், 4ல் குறிப்பிட்டுள்ளபடி, அரசியலமைப்பு சட்டத்தின், 175 அல்லது, 176ன் பிரிவின்படி, சபை கூடியிருக்கும் போது, கவர்னர் உரை நிகழ்த்துகையில் குறுக்கீடு செய்யக்கூடாது. அந்த வகையில், கவர்னர் உரைக்கு முன்னும், பின்பும் குறுக்கீடு செய்து, தடங்கல் செய்த முதல்வர் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க சபாநாயகர் முன்வர வேண்டும். அதுவே சட்டம்; அதுவே ஜனநாயகம்.

திரிணமுல் காங்., கட்சி ஆட்சி நடக்கும் மேற்கு வங்க சட்டசபையில், எதிர்க்கட்சியாக இருக்கும் பா.ஜ.,வினரும், கவர்னர் உரையில களேபரம் செஞ்சாங்களே... அவங்களுக்கும் இந்த விதிகள் பொருந்துமா?
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அருண்மொழி தேவன் பேட்டி: கடலுார் மாவட்டத்தில், என்.எல்.சி., நிறுவனத்திற்கு நிலம், வீடுகளை கொடுத்த விவசாயிகள், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகின்றனர். நிலம், வீடு கொடுத்தவர்களுக்கு நிரந்தர வேலை, சம இழப்பீடு வழங்க வலியுறுத்தி, அ.தி.மு.க., சார்பில் போராட்டம் நடத்தினோம்; சட்டசபையில் இரண்டு முறை கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்தோம். ஆனால், வெளியுலகில் என்ன நடக்கிறது என்பது தெரியாத, பா.ம.க., தலைவர் அன்புமணி, தான் மட்டும் என்.எல்.சி., மக்களுக்காக போராடுவது போல், தவறான பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார்; அவரை, அ.தி.மு.க., சார்பில் கண்டிக்கிறோம்.
என்.எல்.சி.,க்கு நிலம் கொடுத்த மக்களுக்காக போராடுவதை விட, அவங்களுக்காக குரல் கொடுப்பது யார் என்பதையே, பெரிய போராட்டம் ஆக்கிடுவாங்க போலிருக்குதே!

காவிரி டெல்டா விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் இளங்கீரன் அறிக்கை: 'ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும்' என்ற தமிழக அரசின் அறிவிப்பு, பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவதன் வாயிலாக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை; இது, பெரு வணிகர்களுக்கு லாபம் தரும் நடவடிக்கையாகவே அமையும். மருத்துவ குணங்கள் நிறைந்த பாரம்பரிய அரிசி ரகங்களை, ரேஷன் கடைகள் வாயிலாக வழங்க வேண்டும்.
ஏற்கனவே, கண்ட கண்ட உரங்களை போட்டு அரிசியை விஷமாக்கி வச்சிருக்காங்க... இதுல, 'செறிவு ஏத்துறோம்'னு இன்னும் இம்சை தரணுமா?
தமிழக காங்கிரஸ் துணைத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான வாலாஜா அசேன் அறிக்கை: 'ஆட்டுக்கு தாடி போல் நாட்டிற்கு கவர்னர் தேவையா' என, அன்று கேள்வி எழுப்பினார் அண்ணாதுரை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை, நியமன பதவி கொண்டு அடக்கி ஆள நினைப்பது, தமிழகத்தில் செல்லாது.
அன்று அண்ணாதுரை, மத்தியில இருந்த காங்., அரசை பார்த்து தான் அந்த கேள்வியை கேட்டார்... கவர்னர்களை வச்சு, மாநிலங்களில் போட்டி அரசு நடத்தும் வித்தையை கத்துக் கொடுத்ததே, காங்கிரஸ் தானே!