கடையை நொறுக்கிய ரவுடி கைது
சேலம், ஜன. 12-
சேலம், குகை சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்த சண்முகம் மனைவி பரிமளா, 49. இவர் நடத்தும் பெட்டிக்கடைக்கு நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, அல்லிக்குட்டையை சேர்ந்த ரவுடி மோகன், 30, வந்து, 'ஓசி'யில் பீடி கேட்டார். பரிமளா தர மறுக்கவே ஆத்திரமடைந்த மோகன், கடையில் இருந்த கண்ணாடி, ஜாடிகளை அடித்து நொறுக்கினார். பரிமளா புகார்படி, செவ்வாய்ப்பேட்டை போலீசார் விசாரித்து, மோகனை கைது செய்தனர்.
தீ விபத்தில் கொட்டகை நாசம்
ஆத்துார், ஜன. 12-
ஆத்துார் அருகே தென்னங்குடிபாளையம், இந்திரா நகரை சேர்ந்தவர் தனபாக்கியம், 50. இவரது வீடு அருகே மாட்டுக்கொட்டகை உள்ளது. நேற்று மதியம், 3:00 மணிக்கு, மாட்டுக்கொட்டகை தீப்பிடித்து எரிந்தது. ஆத்துார் தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகன் தலைமையில் வீரர்கள், மேலும் தீ பரவாமல் தடுத்தணைத்தனர். ஆனால் கொட்டகை எரிந்து நாசமானது. ஆத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.
2 பேர் மீது 'போக்சோ'
ஆத்துார், ஜன. 12-
ஆத்துாரை சேர்ந்த, 14 வயது சிறுமி, 9ம் வகுப்பு படிக்கிறார். கடந்த, 9ல், கடைக்கு பேனா வாங்க சென்ற அவரை, அதே பகுதியை சேர்ந்த, ஹரிஹரன், 21, ருத்தேஸ்வரன், 21, ஆகியோர் வழிமறித்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் புகார்படி, ஆத்துார் மகளிர் போலீசார், நேற்று, ஹரிஹரன், ருத்தேஸ்வரன் மீது, 'போக்சோ' வழக்கு பதிவு செய்தனர். ஹரிஹரனை கைது செய்த போலீசார், ருத்தேஸ்வரனை தேடுகின்றனர்.
திருப்பூர் குமரன் நினைவு தினம்
சேலம், ஜன. 12-
சேலம் மாநகர் மாவட்ட காங்., சார்பில்,
5 ரோட்டில், கொடிகாத்த குமரன் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. மாநகர தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார். வர்த்தக பிரிவு தலைவர் சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். அதில், குமரன் நினைவு சின்னத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஓட்டல் சூறை; ஒருவருக்கு 'காப்பு'
ஓமலுார், ஜன. 12-
ஓமலுார், காமலாபுரத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 34. செம்மாண்டப்பட்டியில் ஓட்டல் நடத்துகிறார். நேற்று முன்தினம் கடையில் சாப்பிட்ட, 3 பேர், பணம் தர முடியாது எனக்கூறி தகராறில் ஈடுபட்டனர். தொடர்ந்து, சேர், டேபிளை உடைத்து, கடை ஊழியரான, தாத்தியம்பட்டியை சேர்ந்த
நல்லதம்பி, 42, என்பவரை தாக்கினர். இதுகுறித்து ஓமலுார் போலீசார் விசாரித்ததில், செம்மாண்டப்பட்டி, ஏனாதி காலனியை சேர்ந்த செல்வம், 25, மணி, 27, கவுதம், 24, என தெரிந்தது. நேற்று, கவுதமை கைது செய்த போலீசார், மற்ற இருவரை தேடுகின்றனர்.
விபத்தில் வாலிபர் பலி: டிரைவருக்கு 7 மாத சிறை
சேலம், ஜன. 12-
வாழப்பாடி, வெள்ளாளகுண்டத்தை சேர்ந்தவர் அஜய் அர்ஜூன், 23. இவர், 'சைன்' பைக்கில், 2020 ஜூன், 19ல் சேலத்தில் இருந்து வெள்ளாள குண்டத்துக்கு சென்றுகொண்டிருந்தார். சீலநாயக்கன்பட்டி பைபாஸ் அருகே சென்றபோது, கோவையில் இருந்து சென்னை நோக்கி சென்ற லாரி, பைக் மீது மோதியது. அதில் அஜய் அர்ஜூன் பலியானார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்ய அன்னதானப்பட்டி போலீசார், விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரான, சென்னை, மாதவரத்தை சேர்ந்த சின்னையா, 36, என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கிறிஸ்டல் பபிதா, நேற்று சின்னையாவுக்கு, 7 மாத சிறை தண்டனை, 11 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
பைக் மீது பஸ் மோதல்
கூலித்தொழிலாளி பலி
ஆத்துார், ஜன. 12-
ஆத்துார் அருகே அப்பமசமுத்திரம் ஊராட்சி, அய்யனார்பாளையத்தை சேர்ந்த, கூலித்தொழிலாளி மணிகண்டன், 36. இவர் நேற்று இரவு, 8:20 மணிக்கு கொத்தாம்பாடி அருகே உள்ள சாலை வளைவில், 'டிவிஎஸ் - ஸ்போர்ட்' பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, ஆத்துாரில் இருந்து சேலம் நோக்கி வந்த தனியார் பஸ், பைக் மீது மோதியது. அதில் துாக்கி வீசப்பட்ட மணிகண்டன், சம்பவ இடத்தில் உயிரிழந்தார். ஆத்துார் ஊரக போலீசார் வழக்கு பதிவு செய்து, பஸ்சை நிறுத்திவிட்டு சென்ற டிரைவரை தேடிவருகின்றனர்.
மொபைல் பறிப்பு
சேலம், ஜன. 12-
ஆத்துார், விநாயகம்பட்டியை சேர்ந்தவர் ேஷாபா, 40. சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிகிறார். நேற்று இரவு, 7:00 மணிக்கு பணியை முடித்து விட்டு பிருந்தாவன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை பின் தொடர்ந்து, பைக்கில் வந்த இருவர், மொபைல் போனை பறித்துக்கொண்டு தப்பினர். அழகாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
அம்மா உணவக ஊழியர்கள்
உள்ளிருப்பு போராட்டம்
சேலம், ஜன. 12-
சேலம், மணியனுாரில் அம்மா உணவகம் உள்ளது. 12 பெண்கள் பணிபுரிகின்றனர். அதில், 6 பேரை நீக்கம் செய்வதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் தற்போது பணியில் உள்ள, 12 பேரில் உமா தலைமையில் தொடர்ந்து பணி வழங்க கோரினர்.
இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்திலும் நேற்று புகார் அளித்தனர். ஆனால் கோரிக்கையை நிறைவேற்ற மாநகராட்சி அதிகாரிகள் உறுதி அளிக்க மறுத்து விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், நேற்று மாலை, 4:30 மணி முதல், அம்மா உணவக உட்புறம் அமர்ந்து, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். போலீசார் பேச்சு நடத்தியதால், 2:30 மணி நேரம் நடந்த உள்ளிருப்பு போராட்டத்தை வாபஸ் பெற்று, பெண்கள் பணியை தொடர்ந்தனர்.
'வெளி மாநிலத்தவரை பணியமர்த்தாதீர்'
வணிகர்கள் விழிப்புணர்வு பேரணி
காடையாம்பட்டி , ஜன. 12-
வெளி மாநிலத்தவரை பணியில் அமர்த்தக்கூடாது என, வணிகர்கள் சங்கத்தினர், விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியில் இரும்புக்கடை உரிமையாளர் சந்தோஷ்குமாரை, அதே கடையில் வேலை செய்த, பீகாரை சேர்ந்த இரு சிறுவர்கள், கடந்த டிச., 27ல் கொலை செய்தனர்.
இதைத்தொடர்ந்து காடையாம்பட்டி வட்டார அனைத்து வணிகர் சங்கம் சார்பில் நேற்று, வெளி மாநிலத்தவரை பணியில் அமர்த்தக்கூடாது என்பதை வலியுறுத்தி மக்கள், வணிகர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, தீவட்டிப்பட்டி பஸ் ஸ்டாப்பில் இருந்து காடையாம்பட்டி வரை, பேரணியாக சென்றனர். இதில் நிர்வாகிகள் பிரபாகரன், பழனிசாமி, முத்து உள்பட பலர் பங்கேற்றனர்.
காதலர்களை மிரட்டி பணம் பறிப்பு
வாலிபர் மீது பாய்ந்தது குண்டாஸ்
சேலம், ஜன. 12-
சேலம், அம்மாபேட்டை, அல்லிக்குட்டையை சேர்ந்தவர் சரவணன், 45. இவர், காதலர்கள், கள்ளக்காதலர்களை குறி வைத்து மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்டு வந்தார். தனிப்படை போலீசார், கடந்த, 1ல் சரவணணை கைது செய்தனர். விசார னையில், சில்மிஷ படங்கள், வீடியோக்களை எடுத்து மிரட்டி பணம் பறித்தது தெரிந்தது. இதில் வி.ஐ.பி.,க்களின் வாரிசுகள், என, 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இவர் மீது இதுவரை கொண்டலாம்பட்டி, இரும்பாலை, அன்னதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷன்களில், 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்கள் இடையே பீதியை ஏற்படுத்தும்படி செயல்பட்டதால், சரவணனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, போலீஸ் கமிஷனர் நஜ்முல் ேஹாடா நேற்று உத்தரவிட்டார். இதனால் சேலம் மத்திய சிறையில் உள்ள அவர், ஓராண்டுக்கு அடைக்கப்பட்டார்.
வேட்டி, சேலை
50 சதவீதம் வருகை
சேலம், ஜன. 12-
சேலம் மாவட்டத்தில், 1,606 ரேஷன் கடைகளில், கடந்த, 9 முதல், பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. 3ம் நாளான நேற்று இரவு, 8:00 மணி நிலவரப்படி, 2 லட்சத்து, 48 ஆயிரத்து, 615 நுகர்வோர், தலா, 1,000 ரூபாய், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரையுடன் முழு கரும்பை பெற்றுச்சென்றனர். ஏற்கனவே இரு நாளில், 7 லட்சத்து, 10 ஆயிரத்து, 942 பேருக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. அத்துடன் சேர்ந்து, 9 லட்சத்து, 59 ஆயிரத்து, 557 பேர், பொங்கல் பரிசு பெற்றுள்ளனர். இது, 89.30 சதவீதம்.
மாவட்ட சமூக நலத்திட்ட தனி துணை ஆட்சியர் மயில் கூறுகையில், ''இதுவரை வந்துள்ள, 50 சதவீத இலவச வேட்டி, சேலைகள், சப்ளையான கடைகளில் வழங்கப்பட்டு வருகின்றன. நிலுவை வேட்டி, சேலையும் விரைவில் சப்ளையாகி நுகர்வோருக்கு வழங்கப்படும்,'' என்றார்.
கூலமேடு ஜல்லிக்கட்டு
கால்கோள் விழா
ஆத்துார், ஜன. 12-
ஆத்துார் அருகே கூலமேட்டில், வரும், 18ல் ஜல்லிக்கட்டு விழா நடத்த, கலெக்டர், ஆத்துார் ஆர்.டி.ஓ., உள்ளிட்ட அலுவலர்களிடம் ஜல்லிக்கட்டு விழா குழுவினர் சார்பில் மனு அளிக்கப்பட்டது. நேற்று, ஜல்லிக்கட்டு போட்டிக்கு கால்கோள் விழா நடந்தது. கள்ளக்குறிச்சி எம்.பி., கவுதமசிகாமணி தலைமை வகித்து, வாடிவாசல் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். சேலம் கிழக்கு தி.மு.க., மாவட்ட செயலர் சிவலிங்கம்,
ஆத்துார் ஒன்றிய செயலர் செழியன் உள்பட பலர் பங்கேற்றனர்.
10 நாய்கள் கொலை
கும்பலுக்கு வலை
சேலம், ஜன. 12-
சேலம், அழகாபுரத்தை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர், அதே பகுதியில் சுற்றித்திரியும் நாய்களுக்கு தினமும் உணவு அளிப்பதோடு அடிபட்ட நாய்களை மீட்டு சிகிச்சை அளித்து வருகிறார். கடந்த, 2 முதல், நாய்கள் உணவருந்த வராதது அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் நகரமலை அடிவாரத்தில், 10க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்து துர்நாற்றம் வீசுவதாக கிடைத்த தகவல்படி, அங்கு விஜயலட்சுமி சென்று பார்த்தார். சாக்கு மூட்டையில் நாய்கள் கட்டப்பட்டு, ஏரியில் வீசியிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அவர் புகார்படி, அழகாபுரம் போலீசார், மாநகராட்சி
அதிகாரிகள், கால்நடை துறையினர், அங்கு விரைந்தனர். உயிரிழந்த நாய்களை பார்வையிட்டனர். நாய்களை கொன்ற கும்பலை போலீசார்
தேடி வருகின்றனர்.
மேட்டூர் நீர்மட்டம்
113 அடியாக சரிவு
மேட்டூர், ஜன. 12-
மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழைக்கேற்ப மேட்டூர் அணை நீர்வரத்து இருக்கும். நேற்று முன்தினம், 1,570 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று, 1,327 கனஅடியாக சரிந்தது. அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு, 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. தவிர கிழக்கு மேற்கு கால்வாய் வழியே, 400 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. வரத்தை விட திறப்பு அதிகமாக உள்ளதால், நேற்று முன்தினம், 114.20 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், நேற்று, 113.54 அடியாக சரிந்தது. அதற்கேற்ப நீர் இருப்பு, 83.54 டி.எம்.சி.,யாக காணப்பட்டது.
துாய்மை பணியாளர்களுக்கு
புத்தாடை வழங்கி கொண்டாட்டம்
சேலம், ஜன. 12-
சேலம் மாநகராட்சி, 34வது கோட்டத்தில் துாய்மை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அதில் துாய்மை பணியாளர்களுக்கு பச்சரிசி, வெல்லம், புத்தாடை, புதுப்பானை உள்ளிட்ட பொங்கல் சீர்வரிசையை வழங்கி, கவுன்சிலர் இளங்கோ கவுரவித்தார். தொடர்ந்து, 'எனது குப்பை, எனது பொறுப்பு' என, துாய்மை பணிகளை மேற்கொண்டு வரும் நகர்புற தன்னார்வர்கள் பாராட்டப்பட்டனர்.
மேயர் ராமச்சந்திரன், துாய்மை விழிப்புணர்வு நடனமாடிய மாணவ, மாணவியருக்கு பரிசு, செங்கரும்பு வழங்கி வாழ்த்தினார். புகையில்லா போகி எனும் வீதி நாடகம், கடல் பூதம் நாடகம் ஆகியவை அனைவரின் கவனத்தை ஈர்த்தது. பிளாஸ்டிக் பயன்பாடின்றி காகிதத்தால் ஆன பொருட்களை கொண்டு விழா நடந்தது.
சேலத்தை துாய்மைப்படுத்த
ரூ.15 லட்சத்தில் உபகரணம்
சேலம், ஜன. 12-
இந்தியன் வங்கி சார்பில் கூட்டாண்மை சமூக பொறுப்பு நிதியில், 15 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, சேலம் மாநகராட்சிக்கு உபகரணங்கள் வழங்க ஏற்பாடு நடந்தது.
அதன்படி கோட்டை பல்நோக்கு அரங்கில் நடந்த விழாவில், மேயர் ராமச்சந்திரன், தளவாட பொருட்களை வழங்கினார். கடப்பாரை, மண்வெட்டி, அரிவாள் என, 10 வகையான தளவாட பொருட்களை, 250 துாய்மை பணியாளர்கள் பெற்றுக்கொண்டனர்.
இவர்களுடன் சேர்ந்து, 4 மண்டலங்களில் உள்ள, 2,250 துாய்மை பணியாளர்களுக்கும், தளவாட பொருட்கள் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். துணை மேயர் சாரதாதேவி, மண்டல குழு தலைவர்கள் அசோகன், தனசேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.