சேலம், ஜன. 12-
சேலம் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்
செந்தில்விநாயகம் அறிக்கை:
போகி பண்டிகையை முன்னிட்டு மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் டயர், ரப்பர், பிளாஸ்டிக், செயற்கை பொருட்களை எரித்தால் நச்சு புகைமூட்டம் உண்டாகும். அது மக்களுக்கு சுவாச நோய், இருமல், நுரையீரல், கண், மூக்கு எரிச்சல் போன்ற உபாதைகளை ஏற்படுத்தும். நச்சு காற்று, கரும்புகையால் காற்று மாசு அடைந்து, நம் நகரமே கறுப்பு நகரமாக மாறக்கூடும். நச்சுப்புகை கலந்த பனிமூட்டத்தால் விமானங்கள் புறப்படவும், சாலை போக்குவரத்துக்கும் தடை ஏற்படும். இதுபோன்ற செயல் மூலம் காற்றை மாசுபடுத்தல் சட்டப்படி குற்றம். அதனால் போகி பண்டிகையின்போது டயர், ரப்பர், பிளாஸ்டிக் போன்ற எந்தவித பொருட்களையும் தீயிட வேண்டாம். அன்று குப்பையை முறைப்படி அப்புறப்படுத்தி, பொங்கல் திருநாளை மகிழ்ச்சி, மாசில்லாமல், புகையில்லா போகியை கொண்டாடி மகிழ்வோம்.
மாநகராட்சி வாகனத்திடம் கொடுங்க!
சேலம் மாநகராட்சியில் பழைய பொருட்களை மக்கள் எரிக்காமல், மாநகராட்சி வாகனத்தில் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான இலகு ரக வாகனத்தை, மேயர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாநகராட்சியில், 141 வாகனங்கள் மூலம் தினமும் குப்பை சேகரிக்கப்படுகிறது. மக்கள், மாநகராட்சி வாகனங்களிடம் பழைய பொருட்களை வழங்க வேண்டும். அதன்மூலம் புகையில்லா, மாசற்ற போகியை கொண்டாட, மேயர் கேட்டுக்கொண்டார்.