சேலம், ஜன. 12-
சேலம், சித்தனுார், காட்டுவளவை சேர்ந்த கண்ணன் மகன் விஜய், 26. சங்கர் நகரை சேர்ந்த அவரது நண்பர் அருள், 35. இருவரும் நேற்று சொகுசு காரில் புறப்பட்டனர்.
காலை, 9:30 மணிக்கு, சேலம், ஏ.வி.ஆர்., சந்திப்பு நோக்கி வந்தபோது, தாறுமாறாக ஓடிய கார், அந்த வழியே நடந்து சென்ற கல்லுாரி மாணவியர் இருவர், முதியவர் மீது, அடுத்தடுத்து மோதியது. அதில் படுகாயமடைந்த இரு மாணவியரும், சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். முதியவர் காயத்துடன் தப்பினார். அங்கு திரண்ட மக்கள், ஆத்திரமடைந்து காரில் இருந்த இருவரையும் தாக்கினர். சூரமங்கலம் போலீசார், இரு வாலிபர்களையும் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அதில், காரை ஓட்டி வந்த விஜய், குடிபோதையில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். படுகாயமடைந்த மாணவி, சேலம், அழகாபுரம், சின்னபுதுாரை சேர்ந்த முத்துசாமி மகள் கிருத்திகா, 19, பெருமாள் மகள் சிவரஞ்சினி, 19, என தெரிந்தது. போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்து தொடர்பாக விசாரிக்கின்றனர்.