சேலம், ஜன. 12-
சேலம் மாவட்டத்தில், நடிகர் அஜித் நடித்த, 'துணிவு' திரைப்படம், விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படம், பல்வேறு தியேட்டர்களில் நேற்று வெளியானது. இதையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று காலை, 4:00 மணிக்கு விஜய் படம் திரையிடப்பட்டது. முன்னதாக நள்ளிரவு, 1:00 மணிக்கு திரையிடப்பட்ட துணிவு படத்தை காண, சேலம், புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தியேட்டர் முன் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அங்கிருந்த காரின் மீது ஏறி ரசிகர்கள் ஆட்டம் போட்டதோடு, பட்டாசுகளை கொளுத்தி வீசினர்.
நேரம் கடந்தும், திரையரங்கின் கதவு திறக்காத ஆவேசத்தில் கதவின் மீது ஏறி உள்ளே குதித்த ரசிகர்கள், திரையங்கின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர். அதில் ஒரு ரசிகருக்கு, காலில் அடிபட்டு சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அதேநேரம் கூட்ட நெரிசலில் சிக்கிய மற்றொரு ரசிகரின் வலது காலில் அடிபட்டது. அவரை, சக ரசிகர்கள் மீட்டு வெளியே அழைத்து வந்தனர். 'போதை'யில் இருந்த அந்த நபர், மருத்துவமனைக்கு வர மறுத்தார். ஆனால் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் தியேட்டருக்கு வெளியே, ரசிகர்கள் இருசக்கர வாகனத்தில் அதிக ஒலி எழுப்பியபடி சென்றதால், போலீசார், ஒரு வாகனத்தை பறிமுதல் செய்து கொண்டு எச்சரித்து அனுப்பினர்.