தாரமங்கலம், ஜன. 12-
லாரி டிரைவரை கொடூரமாக கொன்ற வழக்கில், அவரது 'குடி'கார நண்பர் கைது செய்யப்பட்டார்.
தாரமங்கலம், பெரியசோரகை மாட்டுக்காரனுாரை சேர்ந்த லாரி டிரைவர் மணி, 50. இவருக்கு மனைவி, இரு மகள், ஒரு மகன் உள்ளனர். தாரமங்கலம் சைக்கிள் ஸ்டாண்ட் உரிமையாளர் குமாரின் லாரியில், மணி டிரைவராக இருந்தார். கடந்த, 8ல் கருக்குப்பட்டியில் உள்ள கிணற்றில், உடல் துண்டு, துண்டாக வெட்டப்பட்ட நிலையில் மணி இறந்து கிடந்தார். தனிப்படை போலீசார் விசாரணையில், கருக்குபட்டியை சேர்ந்த செல்வராஜ், துட்டம்பட்டி சக்திவேல் ஆகியோர், மணியுடன், கடந்த, 7ல் சென்றது தெரிந்தது. இதனால் இருவரையும் பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் செல்வராஜ் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டதால், அவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
மணியும், மரம் அறுக்கும் வேலை செய்யும் செல்வராஜூம் நண்பர்கள், கடந்த, 7ல், கருக்குபட்டியில் உள்ள செல்வராஜ் வீட்டில் இருவரும் மது அருந்தினர். போதையில் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கோபமடைந்த செல்வராஜ், கொடுவாளால் மணியின் பின் தலையில் தாக்கினார். மணி சரிந்து விழுந்துள்ளார். பலமுறை எழுப்பியும் எழவில்லை. இதனால் முழு உடலையும் துாக்கிச்சென்று அவர், கிணற்றில் வீசினால் யாராவது பார்த்து விடுவார்கள் என நினைத்து, பெரிய வகை கத்தி, கொடுவாளால் கை, கால்களை தனித்தனியே வெட்டி, உடலை கிணற்றில் வீசியுள்ளார். இதை விசாரணையில் அவர் ஒப்புக்கொண்டார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.