ஓசூர், ஜன. 12-
ஓசூரில் மாயமான பெண் குழந்தையை, இரண்டு மணி நேரத்தில் மீட்டு பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
ஓசூர், மத்திகிரி அருகே குதிரைபாளையத்தை சேர்ந்தவர் அன்பு, 38, லாரி டிரைவர்; இவர் நேற்று காலை, 9:40 மணிக்கு, மத்திகிரி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள 'ஏடிஎம்'ல் பணம் எடுக்க, தன் மூன்று வயது பெண் குழந்தையை அழைத்து சென்றார். குழந்தையை வெளியே நிறுத்தி விட்டு, பணம் எடுத்து விட்டு வெளியே வந்தபோது குழந்தையை காணவில்லை. மத்திகிரி போலீசில் புகார் செய்தார். எஸ்.ஐ., சிற்றரசு மற்றும் போலீசார், தனிப்படை அமைத்து குழந்தையை தேடினர். அப்பகுதியில் இருந்த, 'சிசிடிவி' கேமராக்களை பார்த்தபோது, குழந்தை அங்கிருந்து நடந்து செல்வது தெரிந்தது.
குதிரைபாளையம் கிராமம் அருகே தனியாக அழுது கொண்டே சென்ற குழந்தையை, இரண்டு மணி நேரத்தில் மீட்ட போலீசார், பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.