தர்மபுரி, ஜன 12-
தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கை:
தர்மபுரி மாவட்டத்திலுள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொது வினியோக திட்டத்தில், ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்ய சோதனை அடிப்படையில், ஒரு ரேஷன் கார்டுதாரர்களுக்கு மாதம் ஒன்றுக்கு அரிசிக்கு பதில், இரண்டு கிலோ ராகி வினியோகம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, தர்மபுரி மாவட்டத்தின் மாதாந்திர தேவையான, 440 டன் ராகியை, விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
மாவட்டத்தில் அதிகளவில் ராகி சாகுபடி செய்யப்படும் தர்மபுரி, பென்னாகரம், அரூர் தாலுகா பகுதிகளில் இன்று முதல், ராகி கொள்முதல் செய்யப்பட உள்ளது.
தர்மபுரி, பென்னாகரம் மற்றும் அரூரில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்றிலிருந்து, காலை, 9:30 முதல் மதியம், 1:30 வரையிலும், மதியம், 2:30 முதல் மாலை, 6:30 வரை ராகி கொள்முதல் செய்யப்பட உள்ளது.
விவசாயிகள் சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு மற்றும் ஆதார் எண் ஜெராக்ஸ் உள்ளிட்ட ஆவணங்களுடன் கொள்முதல் மையங்களுக்கு துாசி, கல், மண் நீக்கி தரம் பிரித்து கொண்டு வர வேண்டும்.
ஒரு குவிண்டால் ராகிக்கு அரசு நிர்ணயித்துள்ள, 3,578 ரூபாய் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். முறைகேடுகள் இருந்தால் விவசாயிகள், 94439 38003 என்ற மொபைல் போன் எண், 04342 231345, 044 26424560 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.