கிருஷ்ணகிரி, ஜன. 12-
கிருஷ்ணகிரி நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. இதில், பல இடங்களில் குப்பைகள் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் தொடர்ந்து புகார் அளித்தனர்.
இதையடுத்து, குப்பைகளில் தேங்கும் பிளாஸ்டிக் கழிவுகளை புகையில்லா எரிபொருளாக மாற்றும் முன்னோடி திட்டம், நகராட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.
மக்கும் குப்பையை உரமாக மாற்றினாலும், பொதுவெளியில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை, குப்பை கிடங்குகளில் இருந்து பிரிக்க முடியவில்லை.
இந்நிலையில், பிளாஸ்டிக் கழிவுகளை, புகை இல்லாத எரிபொருளாக மாற்றி, தொழிற்சாலைகளுக்கு அனுப்ப, பரமக்குடியை சேர்ந்த தனியார் நிறுவனம் முன்வந்தது. இதையடுத்து, தற்போது கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட, சேலம் தேசிய நெடுஞ்சாலை அருகிலுள்ள குப்பைக்கிடங்கில் இதற்கான இயந்திரங்களை அந்நிறுவனமே வழங்கி, மூன்று மாத முன்னோட்டத்தை நடத்தி வருகிறது.
தமிழகத்தில் முதல்முறையாக, கிருஷ்ணகிரி குப்பை உரக்கிடங்கில் நடந்துவரும் பிளாஸ்டிக் கழிவுகளை எரிபொருளாக மாற்றும், 'எக்ஸ்டிரூட் கம்ப்ரசர்' இயந்திர பணிகளை, கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், “விரைவில் நகராட்சிக்கு உட்பட்ட மூன்று குப்பை கிடங்குகளிலும், இந்த இயந்திரங்கள் அமைக்கப்படும்,” என்றார்.