போச்சம்பள்ளி, ஜன. 12-
போச்சம்பள்ளி, அரசு மருத்துவமனை நுழைவாயிலை மறித்து நிறுத்தப்படும் வாகனங்களால், சிகிச்சை பெற வரும் நோயாளிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியிலுள்ள அரசு மருத்துவமனைக்கு, சுற்று வட்டார கிராமங்களிலிருந்து, நாள்தோறும், 300க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர்.
மேலும், 20க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். புறநோயாளிகள் மற்றும் அவர்களை அழைத்து வரும் உறவினர்கள், தங்களது இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களை மருத்துவமனை நுழைவாயிலில், மருத்துவமனைக்கு உள்ளே செல்லும் பாதையில், ஆங்காங்கே நிறுத்தி விட்டு செல்கின்றனர்.
இதனால், மருத்துவமனைக்கு வரும், 108 அவசர கால ஆம்புலன்ஸ்கள் உள்ளே வரமுடியாமலும், மருத்துவமனையிலுள்ள நோயாளிகளை மேல்சிகிச்சைக்கு ஏற்றிச்செல்ல முடியாமலும்
உள்ளது.
மேலும், மேல்சிகிச்சைக்கு நோயாளிகளை அழைத்துச் செல்ல மிகவும் சிரமம் ஏற்படுவதோடு, அவர்களை நடக்க வைத்தும், ஸ்டெச்சரில் வைத்தும் வெளியே கொண்டு வந்து, அழைத்துச்செல்ல வேண்டிய நிலை உள்ளது.
எனவே, மருத்துவமனை
நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து, நுழைவாயிலில் வழியை மறித்து நிறுத்தப்படும் வாகனங்களை உரிய இடத்தில் நிறுத்த
நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
வாகனங்கள் நிறுத்த தனி இடம் உள்ளது. ஆனாலும், இங்கு வருவோர் தங்கள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி விட்டு செல்கின்றனர். மருத்துவமனையில் ஆட்கள் பற்றாக்குறை இருப்பதால், எங்களால் இதை சரிசெய்ய முடியவில்லை. உடனடியாக வழியில் வாகனங்கள் நிறுத்தாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும்.
-நாராயணசாமி,
தலைமை மருத்துவர், போச்சம்பள்ளி.
தினமும், 300க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். மிகவும் ஆபத்தான முறையில் சிகிச்சைக்கு வருவோரை, உள்ளே அழைத்துச்செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. உள்ளே, 108 அவசர கால ஆம்புலன்ஸ் கூட வர முடியாத நிலையை, அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பா.விக்ரமன், 42, மடத்தானுார்.
இந்த மருத்துவமனைக்கு, 108 அவசர கால ஆம்புலன்ஸ் வாகனத்தில் அழைத்து வரப்படும் நோயாளிகளை, மிகுந்த சிரமத்திற்கு இடையே உள்ளே கொண்டு செல்லும்போது, காலதாமதம் ஏற்பட்டு, உடனடி சிகிச்சை பெற முடியாமல், உயிரிழப்பு
ஏற்படும் அபாயம் உள்ளது.
- எஸ்.தனபால், 42, சூளகரை.