கிருஷ்ணகிரி, ஜன. 12-
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள, 12 சார்பதிவாளர் அலுவலகங்களில், பதிவுத்துறை சார்பாக சிறப்பு முனைப்பு இயக்கம் துவக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சிறப்பு முனைப்பு இயக்கம், கடந்த ஜன., 1ல் தொடங்கி, வரும் மார்ச், 31 வரை நடக்கிறது. இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள, 12 சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்த ஆவணங்கள் தொடர்பாக, குறைவு முத்திரை தீர்வையை செலுத்தாததால், முடக்கப்பட்ட ஆவணங்களை பெற்றுக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, அந்த ஆவணத்திற்கு ஏற்பட்டுள்ள குறைவு முத்திரை தீர்வை (அசல் மற்றும் வட்டியுடன்) செலுத்தி, அசல் ஆவணத்தை விடுவித்துக்கொள்ள ஏதுவாக, சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள தனித்துணை ஆட்சியர் (முத்திரைத்தாள்) மற்றும் கிருஷ்ணகிரி தனி தாசில்தார் (முத்திரைத் தாள்) ஆகியோரை தொடர்பு கொண்டு, பயன் படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.