குமாரபாளையம், ஜன. 12 --
குமாரபாளையம் விசைத்தறி தொழிலாளர்களுக்கான பொங்கல் போனஸ் பேச்சுவார்த்தையில் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் பங்கேற்கவில்லை.
குமாரபாளையம் விசைத்தறி தொழிற்சங்கங்கள் சார்பில், 20 சதவீத பொங்கல் போனஸ் கேட்டிருந்தனர். இதற்கு விசைத்தறி உரிமையாளர்கள் உடன்படவில்லை. இதனால் தாலுக்கா அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு தாசில்தார் சண்முகவேல் சில நாட்களுக்கு முன் ஏற்பாடு செய்திருந்தார். இதில் விசைத்தறி உரிமையாளர்கள் பங்கேற்கவில்லை. அவர்கள் பங்கேற்க முடியாத காரணம் குறித்து கடிதம் மூலம் தாசில்தாருக்கு தெரியப்
படுத்தினர்.
அதன்பின் நேற்றுமுன்தினம் நடந்த பேச்சுவார்த்தையில் கடந்த ஆண்டு வழங்கிய, 8.15 சதவீத போனஸ் தருகிறோம் என ஜவுளி உற்பத்தியாளர்கள் கூற, உடன்பாடு ஏற்படாமல் தோல்வியில் முடிந்தது. நேற்று தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் சண்முகவேல், தொழிலாளர் நல ஆய்வாளர் முருகேசன் தலைமையில் மீண்டும் நடந்த பேச்சுவார்த்தையில், ஜவுளி உற்பத்தியாளர்கள் பங்கேற்கவில்லை. மீண்டும் ஜன., 13 பிற்பகல், 12:30 மணியளவில் போனஸ் பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.ஐ. மலர்விழி, தொழிற்சங்க நிர்வாகிகள் அசோகன், பாலசுப்ரமணி, சுப்ரமணி, ராமகிருஷ்ணன், பாலுசாமி, வெங்கடேசன், செல்வராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஜவுளி உற்பத்தியாளர் சங்க தலைவர் சங்கமேஸ்வரன் கூறுகையில், ''தாலுக்கா அலுவலக கூட்டம் சம்பந்தமான கடிதம் தாமதமாக கிடைத்தது. சங்க நிர்வாகிகள் பலரும் வெளியூர் சென்று இருந்ததால் கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை,'' என்றார்.