முன்னாள் படைவீரர்கள்
சிறப்புகுறைதீர் முகாம்
நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்தார். முன்னாள் படைவீர்கள் குடும்த்தினர், 10 மனுக்கள் வழங்கினர். மனுக்களைப் பெற்ற கலெக்டர், அவற்றை பரிசீலினை செய்து, உரிய அலுவலர்களிடம் வழங்கி, மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். முன்னாள் படைவீரர்கள் உதவி இயக்குனர் செண்பகவள்ளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மூலிகை தோட்டம்
அமைக்க மானியம்
எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் வட்டார தோட்டக்கலை உதவிஇயக்குனர் கார்த்திகா வெளியிட்ட அறிக்கை:
எலச்சிபாளையம் வட்டாரத்தில், மாநில தோட்டக்கலை வளர்ச்சித்திட்டம் மூலம், வீடுகளில் மூலிகை தோட்டம் அமைக்க, மூலிகைச்செடி தொகுப்பு மானிய விலையில் வழங்கப்பட உள்ளது. ஒருசெடி வகைக்கு, 2 செடிகள் என மொத்தம் 20 செடிகள், 10 செடி வளர்ப்பு பைகள், 20 கிலோ தென்னை நார்க்கட்டிகள் மற்றும் 4 கிலோ மண்புழுஉரம் அடங்கிய தொகுப்பின் விலை, 1,500 ரூபாய். 50 சதவீதம் மானியம் போக ஒருவருக்கு, 750 ரூபாய்க்கு வழங்கப்படும். இதில் பயனடைய விரும்புவோர் www.tnhorticulture.gov.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்யலாம் அல்லது ஆதார்நகல் மற்றும் ஒருபாஸ்போட் புகைப்படத்துடன் தோட்டக்கலைத்துறையில் சமர்ப்பித்து பெறலாம்.
விவசாயிகளின் 30 ஆண்டு
கோரிக்கை நிறைவேறியது
எருமப்பட்டி: எருமப்பட்டி டவுன் பஞ்., 15வது வார்டு அம்பேத்கர் நகரில் இருந்து வைத்தியநாதபுரம் இணைப்பு சாலை வரை, 2 கி.மீ., தூரம் உள்ள சாலை, 30ஆண்டுகளுக்கும் மேலாக குண்டும் குழியுமாக இருந்தது. இப்பகுதி விவசாயிகள் விளை பொருட்களை கொண்டு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். இந்த ரோட்டை தார் சாலையாக மாற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்தாண்டு நபார்டு மூலம் தார் சாலையாக மாற்றி கழிவு நீர் வடிகால், பாலம் உள்ளிட்ட பணிகள் செய்ய, 1.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வந்தன. இப்பணி தற்போது முடிந்துள்ளதால், இப்பகுதி விவசாயிகளின், 30 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறியதாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ரூ.1.22 கோடி நலத்திட்ட
உதவி வழங்கல்
சேந்தமங்கலம்: கொல்லிமலை நத்துக்குழிபட்டியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. முகாமில் கலெக்டர் ஸ்ரேயா சிங்,467 பயனாளிகளுக்கு, 1.22 கோடி ரூபாய் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கொல்லிமலை நத்துக்குழிபட்டியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. ஆர்.டி.ஓ., சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் உள்ளிட்ட அலுவலர்கள் கிராம பகுதிகளுக்கு நேரில் சென்று மனுக்களை பெற்றனர்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவக்குமார், ஆர்.டி.ஓ., மஞ்சுளா, மாவட்ட தனித்துணை கலெக்டர் சமூக பாதுகாப்புத் திட்டம் பிரபாகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
தேசிய கராத்தே போட்டி
நாமக்கல் வீரர்கள் சாதனை
நாமக்கல்: 'ஆல் இந்தியா கியோகுஷின் புல் கான்டக்ட் கராத்தே' சார்பில், தேசிய அளவிலான கராத்தேபோட்டி, டில்லி அருகே நொய்டாவில் நடந்தது.
அதில், தமிழகம், உத்திரபிரதேசம், பஞ்சாப், மேற்கவங்கம், உத்திரகாண்ட், அசாம், மகாராஸ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டியில், நாமக்கல் மாவட்டத்தில் இருந்து, பயிற்சியாளர் சென்சாய் உதயகுமார் தலைமையில், ஆறு வீரர்கள் கலந்து கொண்டனர். அவர்களில், ஜெயப்பிரகாஷ், கமலேஷ் ஆகியோர் வெற்றி பெற்று, மூன்றாமிடம் பிடித்து சாதனை படைத்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு, மனோஜ் மிஸ்ரா, சிவாஜி கங்குலி, நடிகர் சுமன் ஆகியோர் பதக்கம், சீல்டு மற்றும் சான்றிதழ் வழங்கினர்.
சமத்துவ பொங்கல் விழா
நாமக்கல்: தாலுகா புகைப்பட கலைஞர்கள் சங்கம் சார்பில், சமத்துவ பொங்கல் விழா, நாமக்கல்லில் கொண்டாடப்பட்டது. சங்கத் தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். செயலாளர் தேவசகாயம், பொருளாளர் அர்ஜூனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேந்தமங்கலம் சி.எஸ்.ஐ., கிறிஸ்துவ மதபோதகர் சாந்தகுமார், நாமக்கல் காதர் பாஷா ஆகியோர், சமத்துவ பொங்கல் விழாவில் வாழ்த்தினர்.
இலவச தென்னங்கன்று வழங்கல்
எருமப்பட்டி: எருமப்பட்டி யூனியனில் உள்ள பெருமாப்பட்டி பஞ்.,ல் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் இலவச தென்னங்கன்றுகள் வழங்கும் முகாம் நடந்தது. ஆட்மா குழு தலைவர் பாலசுப்பரணியன் தலைமை வகித்தார். வேளாண்மை உதவி இயக்குநர் கவிதா முன்னிலை வகித்தார். பஞ்., பகுதிகளில் உள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் தலா, இரு தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்க்ப்பட்டன. பெருமாப்பட்டி பஞ்., தலைவர் ராணி பாலகிருஷ்ணன், வேளாண்மை அலுவலர் பாபு, முரளிதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அயலக தமிழர் திருநாள் விழா
குமாரபாளையம்: குமாரபாளையம் அரசு பி.எட்,ல கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் அயலக தமிழர் நாள் விழா முதல்வர் ஜான் பீட்டர் தலைமையில் நடந்தது. மலேசியாவில் தமிழ் கல்வி எனும் தலைப்பில், மலேசியா, நெகிரி செம்பிலான் பகுதியை சேர்ந்த நீலாய் தமிழ்ப்பள்ளி ஆசிரியை கலைவாணி இணைய வழியில் பேசினார். சிங்கப்பூரில் இருந்து ஆசிரியை விஜயபாரதி, பொறியாளர் விக்னேஷ் ராஜ்சேகர்,அபுதாபியிலிருந்து பொறியாளர் பாஸ்கர், இணைய வழியில் பேசினர்.
ஆலாம்பட்டி பகுதியில்
தேங்கிய குப்பையால் துர்நாற்றம்
வெண்ணந்தூர், ஜன. 12-
வெண்ணந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆலாம்பட்டி ஊராட்சியில் உள்ள, ராசிபுரம்- ஆட்டையாம்பட்டி நெடுஞ்சாலையில், அத்தனூர் பஸ் ஸ்டாப் அருகே குப்பை கொட்டப்பட்டு வருகிறது. சாலை ஓரத்தில் குப்பை, அழுகிய காய்கறிகள், மருத்துவக் கழிவுகள், பழைய துணிமணிகள், டயர்கள் போன்றவை அள்ளப்படாமல் பல மாதங்களாக கொட்டப்பட்டு வருகின்றன. அப்பகுதியில் கடும் துர்நாற்றம்
வீசுகிறது.
பல மாதங்களாக அள்ளப்படாமல் உள்ள குப்பையை, அவ்வப்போது ஊராட்சி நிர்வாகம் சார்பில் எரித்து வருவதால் புகைமூட்டத்தாலும் சாலையில் பயணிக்கும் பயணிகள் வேதனை அடைந்திருக்கின்றனர். குப்பையை முழுமையாக அகற்றவும், அந்த இடத்தில் குப்பை தொட்டி வைக்கவும் வேண்டும் என, குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு நடைபெறும்
இடத்தை ஆய்வு செய்த ஆர்.டி.ஓ.,
குமாரபாளையம், ஜன. 12 - -
குமாரபாளையத்தில் வரும் பிப். 5ல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. அந்த இடத்தை நேற்று திருச்செங்கோடுஆர்,டி.ஓ., கவுசல்யா ஆய்வு செய்தார்.
போட்டி நடத்தும் குமாரபாளையம் ஜல்லிக்கட்டு பேரவை செயலர் ராஜ்குமார், அதிகாரிகளிடம் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் அருண் பாலாஜி, டி.எஸ்.பி. மகாலட்சுமி, தாசில்தார் சண்முகவேல், இன்ஸ்பெக்டர் ரவி, கால்நடை மருத்துவர் செந்தில்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.