எருமப்பட்டி, ஜன. 12--
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி பகுதியில் பெருமளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கோழி கொண்டை பூக்களுக்கு, தற்போது போதிய விலையில்லாததால், பொங்கல் பண்டிகை சமயத்தில் பறித்துக்கொள்ளலாம் என, செடிகளிலேயே விட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
எருமப்பட்டியை சுற்றியுள்ள முட்டாஞ்செட்டி, வடவத்துார், கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் மல்லிகை பூ பயிரிட்டுள்ளனர். இதேபோல், பராமரிப்பு வேலை குறைவான பூக்களான கோழி கொண்டை பூக்களையும் விவசாயிகள் பல்வேறு இடங்களில் பயிரிட்டுள்ளனர். கோழி கொண்டை பூக்கள் திருவிழா, விசேஷ நாட்களில் 1 கிலோ ரூ.500 வரை விற்பனை செய்யப்படுகின்றன. முகூர்த்த தினம் இல்லாத சாதாரண நாட்களில், இந்த பூக்களை வியபாரிகள் பெரியளவில் வாங்கி செல்வதில்லை.
இதனால் கடந்த 15 நாட்களாக கோழி கொண்டை பூக்களை விவசாயிகள் பறிக்காமல், பொங்கல் பண்டிகைக்கு அறுவடை செய்வதற்காக செடிகளிலேயே விட்டுள்ளனர். இது குறித்து, கோழி கொண்டை பயிரிட்டுள்ள விவசாயி ஒருவர் கூறியதாவது:
மல்லிகை பூக்களுக்கு இருக்கும் வரவேற்பு, கோழி கொண்டை பூக்களுக்கு இருப்பதில்லை. இருப்பினும் திருவிழா, முகூர்த்த நாட்களில் நல்ல விலை கிடக்கிறது. மேலும், பராமரிப்பு செலவு மிகவும் குறைவாக இருப்பதால், இதையும் சேர்த்து வளர்த்து வருகிறேம். பொங்கல் பண்டிகை சமயத்தில் கோழி கொண்டை பூ தேவை ஏற்பட்டு, நல்ல விலை கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.