ப.வேலூர், ஜன. 12--
தேங்காய் விலை குறைந்ததால், ப.வேலூர் தாலுகா சுற்றுவட்டார பகுதிகளில் நடப்பாண்டு தென்னை மர குத்தகை தொகை, கடந்த ஆண்டை விட குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், ப.வேலூர் தாலுகா உட்பட்ட கபிலர்மலை, சோழசிராமணி, ஜேடர்பாளையம், பரமத்தி, கந்தம்பாளையம், பாலப்பட்டி, ப.வேலூர், ஓலப்பாளையம், பாண்டமங்கலம், பொத்தனூர், வெங்கரை பகுதிகளில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில், தென்னை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். ஏக்கருக்கு, 80 தென்னை மரம் என பராமரிக்கின்றனர்.
தென்னை மர ரகத்தை பொறுத்து, 3 அல்லது 4 ஆண்டுகளில் மகசூல் கொடுக்க துவங்கி விடும். விவசாயிகள், தென்னை மர குத்தகைதாரர்களுக்கும், தேங்காயம் ஏலமண்டி உரிமையாளர்களுக்கும் மர எண்ணிக்கையில் குத்தவைக்கு விடுவது வழக்கம். தென்னை மரத்துக்கு உரம் மற்றும் தண்ணீர் விட்டு பாதுகாத்து வருவது விவசாயிகளின் பணி. குத்தகைக்காரர்கள் மூன்று மாதத்துக்கு ஒரு முறை முற்றிய தேங்காய்களை வெட்டி செல்வர். இதுதான் நடைமுறையாக இருப்பது வழக்கம்.
ஒரு மரத்துக்கு குறிப்பிட்ட தொகை என நிர்ணயம் செய்து மொத்தமாக குத்தகைக்கு விட்டுவிடுவர். கடந்தாண்டு ஒரு தென்னை மரத்துக்கு, ஒரு ஆண்டுக்கு, 1,200 முதல், 1,300 ரூபாய் வரை தொகை நிர்ணயம் செய்து குத்தகைக்கு எடுத்தனர். நடப்பாண்டில் ஒரு மரத்துக்கு, 1,000 ரூபாய் என தொகையை குறைத்து குத்தகைக்கு எடுப்பதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து குத்தகைதாரர்கள் கூறுகையில், 'தொடர் மழையால் தென்னைமரத்தில் காய்கள் அதிக எண்ணிக்கையில் விளைச்சலுக்கு வந்துள்ளன. அதே நேரத்தில் மும்பை மற்றும் வெளி மாநில, வெளி மாவட்டத்திற்கு செல்லும் தேங்காய் விலை குறைத்ததால், தென்னை மர குத்தகை தொகையை குறைத்துள்ளோம்' என்றனர்.