ஓமலுார் , ஜன. 12-
சேலம் - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் கார் எரிந்து கருகியது. அதில் பயணித்த, ஒரே குடும்பத்தை சேர்ந்த, 6 பேர் உயிர் தப்பினர்.
சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அடுத்த எலத்துாரில், காமராஜர் நகர் பிரிவு சாலையில் இருந்து, நேற்று காலை, 11:00 மணிக்கு, சேலம் - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலைக்குள், 'பார்ச்சூன்' கார் நுழைய முயன்றது. அப்போது கேரளா, ஆலப்புழாவிலிருந்து, கர்நாடகா நோக்கி சென்ற, 'ஸ்கோடா' கார், 'பார்ச்சூன்' மீது மோதியது. தொடர்ந்து சாலை நடுவே உள்ள தடுப்பில், 'ஸ்கோடா' மோதி தீப்பிடித்து எரியத்
தொடங்கியது.
அதில் வந்த, கர்நாடகாவை சேர்ந்த பாபு, 62, அவரது மனைவி மெரினா, 55, மகள் ெஷரோல், 25, மகன் சீசன், 31, மருமகள் சலோமி, 27, சலோமியின் மகள் எலேஜா, 2, ஆகியோர் உடனே வெளியேறியதால் உயிர் தப்பினர். நடுரோட்டில் முற்றிலும் எரிந்து கார் கருகியது. காயம் அடைந்த, 6 பேரும், சேலம், மாமாங்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 'பார்ச்சூன்' காரில் வந்த, எலத்துாரை சேர்ந்த, டிரைவர் அரிவின், 23, காயம் அடைந்து, ஓமலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தால் தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட துாரத்துக்கு வாகனங்கள் காத்திருந்தன.
காடையாம்பட்டி தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். விபத்துக்குள்ளான கார்கள் அகற்றப்பட்டு, ஒரு மணி நேரத்துக்கு பின் போக்குவரத்து சீரானது. தீவட்டிப்பட்டி போலீசார்
விசாரிக்கின்றனர்.