வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: சேது சமுத்திர திட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என வலியுறுத்தும் தனித்தீர்மானம் ஒன்றை தமிழக முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்தார். இந்த திட்டத்தை கொண்டு வருவது குறித்து சபையில் விவாதம் நடந்தது. ராமர் குறித்து பேச்சு எழுந்ததால் சலசலப்பு ஏற்பட்டது. பா.ஜ., சட்டசபை தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்,

தனித்தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: 150 ஆண்டு கால கனவான சேதுசமுத்திர திட்டத்தை முன்மொழிவதை வரலாற்று கடமையாக கருதுகிறேன். அண்ணாதுரையின் கனவு, கருணாநிதி நிறைவேற்ற பாடுப்பட்ட திட்டம் தான் இது. பாக்., நீரினையும், மன்னார் வளைகுடாவையும் இணைக்கும் ஆடம்ஸ் பாலத்தின் குறுக்கே வெட்டப்பட வேண்டிய கால்வாய் தான் சேது சமுத்திர திட்டம். முதல் பிரதமர் நேரு காலத்தில் 4 வது ஐந்தாண்டு திட்டத்தில் இடம்பெற்ற திட்டம் இது. இது நிறைவேறினால் வர்த்தகம் பெருகும், இலங்கையை சுற்றி செல்ல வேண்டிய நீளம் குறையும். 1972 ல் தூத்துக்குடியில் வஉசி சிலை திறக்க பிரதமர் இந்திரா வந்தபோது அன்றைய முதல்வர் கருணாநிதி வலியுறுத்தினார்.
அரசியல் முட்டுக்கட்டை
1998ல் பிரதமர் வாஜ்பாய் நிதியை ஓதுக்கினார். பா.ஜ., ஆட்சியில் தான் இந்த திட்ட பாதை எது என தீர்மானிக்கப்பட்டது. 2004 ல் காங்., ஆட்சி அமைந்த போது 2,427 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அரசியல் காரணங்களுக்காக பா.ஜ., தரப்பில் முட்டுக்கட்டை போடப்பட்டது. ஆரம்பம் முதல் ஆதரித்த அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா தன் நிலையை திடீரென மாற்றி கோர்ட்டில் வழக்கு பதிந்தார்.
இது போன்ற அரசியல் முட்டுக்கட்டை நடக்காமல் இருந்தால் ஏரளாமான பயன் கிடைத்திருக்கும். அந்நிய செலாவணி அதிகரிக்கும், கப்பல் பயண நேரம் குறையும். தமிழக மற்றும் அண்டை மாநில துறைமுகங்கள் சரக்கு கையாளும் திறன் அதிகரிக்கும். மீனவர்கள் பொருளாதாரம் உயரும். மீனவர்கள் நலனுக்காக இந்த திட்டம் செயல்படுத்த வேண்டும். கடலோர பாதுகாப்பு வலுப்பெறும். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை கிடைக்கும்.
கனவு திட்டமான இதன் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. சேதுசமுத்திர திட்டத்தை மாற்று பாதையில் செயல்படுத்துவோம் என்று பா.ஜ., அரசு சொல்கிறது. சேதுசமுத்திர திட்டத்தை போராடி கொண்டு வர வேண்டும் என்று இந்த தீர்மானத்தை கொண்டு வருகிறோம். இந்த திட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவேண்டும். தமிழகத்தின் தலைநிமிர இந்த திட்டத்தை நிறைவேற்றி தர வேண்டும் என கேட்டு கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
வேல்முருகன்
பேசுகையில்; 150 ஆண்டு கால கனவு திட்டம். சனாதன சக்திகள் , ராமர் பாலம் இருப்பதாகவும், பாலம் பாதிக்கப்படும் என்றனர். இந்த சனாதன ஆட்சியில் இது போன்று ஏதும் இல்லை என மத்திய அமைச்சர் அப்படி ஏதுமில்லை என பேசியுள்ளார்.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா;
இந்த திட்டம் நிறைவேற்றபட்டால் பயண நேரம் குறைந்து விடும். 1955ல் ராமசாமி முதலியார் தலைமையில் அமைக்கப்பட்ட குழு 9.98 கோடி ஒதுக்க வேண்டும் என்றது.
ஆளூர் ஷா நவாஸ் (விடுதலை சிறுத்தை );
மத்திய அரசு திட்டத்திற்கு நாம் எதிர்ப்பு தெரிவிப்பாக புகார் எழுகிறது. சேது, எய்ம்ஸ், கொண்டு வர முயற்சிப்பது நமக்கு சான்று. பயனுள்ளதை வலியுறுத்துகிறோம். மத்திய அரசு முட்டுக்கட்டை போடுகிறது. தமிழகத்தின் மறுமலர்ச்சிக்கு உதவும் திட்டம். முதல்வர் ஸ்டாலினை பாராட்டுகிறோம்.
பா.ஜ., கட்சி சட்டசபை தலைவர் நயினார் நாகேந்திரன்
பேசுகையில் : சேது சமுத்திர திட்டம் கொண்டு வந்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம். ஆனால் இந்த திட்டத்தை மத நம்பிக்கை குறித்து விமர்சிக்கவோ, ராமர் மற்றும் ராமாயணத்தை பற்றியோ பேசியதை தவிர்க்க வேண்டும். தெய்வமாக வழிபடும் ராமர் குறித்து மூட நம்பிக்கை என்ற பேச்சு வரக்கூடாது. மனித உணர்வுகள், தெய்வநம்பிக்கை இதனை ஏற்க முடியாது.

சபாநாயகர்:
முன்னாள் தலைவர்கள் கூறியதை சிலர் எடுத்து காட்டினர். இருவரது கருத்தும் அவையில் இருக்கட்டும்.
முதல்வர்:
யாரும் தெய்வத்தை பற்றியோ மதத்தை பற்றியோ குறை சொல்லவில்லை. இதனை பயன்படுத்தி தடுத்து விட்டனர் என்று தான் பேசினர். யாரும் விமர்சித்து பேசவில்லை. அவ்வாறு பேசியிருந்தால் நான் ஏற்று கொள்கிறேன்.
நயினார் நாகேந்திரன்: இது போன்ற பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். சேது சமுத்திர பாலம் சேதம் அடையாமல் நிறைவேற்ற வேண்டும். பா.ஜ., ஆதரிக்கிறது என்றார்.
இதற்கு ஓ பன்னீர்செல்வம் பேசுகையில்; நம்முடைய கடல் மற்றும் மணற்பகுதி, நகர்கின்ற தன்மை, சுற்றுச்சூழல் குறித்து, பாதுகாப்பான முறையில் கால்வாய் தோண்டப்பட வேண்டும். இந்த திட்டம் தமிழகத்திற்கு பயனுள்ள திட்டம். சாதக, பாதகங்களை ஆய்வு செய்து பணிகள் நடக்க வேண்டும்.
காங்., உறுப்பினர் செல்வப்பெருந்தகை பேசுகையில்; இந்த திட்டத்தை காங்., தடுத்ததாக சிலர் குற்றம் சாட்டுகின்றனர். இது தவறானது. நாங்கள் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது பிரதமர் மன்மோகன்சிங் 2 ஆயிரத்து 407 கோடி ஒதுக்கினார். யார் தடுத்தார்கள் என்பதை தான் நான் தெரியப்படுத்தினேன். சூயஸ் கால்வாயில் கப்பல் தரை தட்டுகிறது. சேதுசமுத்திர கழகமும் , சூயஸ் கால்வாய் திட்டமும் இணைந்து பணியை செய்து வருகின்றனர். ஜெயலலிதா என்ன பேசினார் என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. இவரது பேச்சுக்கு அதிமுக.,வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
முதல்வர் பதில்
அப்போது எழுந்த முதல்வர் சேதுசமுத்திர திட்டத்திற்கு ஜெயலலிதா கோர்ட்டில் தடை உத்தரவு பெற்றார். வரலாற்றை மறைக்க கூடாது, ஏகமனதாக நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானம், சச்சரவுகள் தேவையில்லை. அவைக்குறிப்பில் இடம் பெற்றுள்ளதைத்தான் பேசுகின்றனர்.
பொள்ளாச்சி ஜெயராமன்;
100 கோடி மக்கள் பின்பற்றுகின்ற ஹிந்து மதத்தை கொச்சைப்படுத்தும் வகையில் சிலர் பேசுகின்றனர். ராமா என்ற கதாபாத்திரம் கற்பனையானது என்ற பேச்சு கவலை அளிக்கிறது. ஹிந்துக்களை புண்படுத்தும். அவர் அவதார புருஷன். ஆகையால் ராமர் குறித்த பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். சேதுசமுத்திர திட்டம் 2, 400 கோடி செலவில் ஏற்கனவே நடந்து இது போன்ற பணிகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர். மீனவர்கள் அச்சத்தை போக்கிட வேண்டும். இது தொடர்பான வழக்கும் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது. இதையெல்லாம் ஆராய்ந்து மக்களுக்கு நன்மை தரும் திட்டமாக எதுவாக இருந்தாலும் அதனை அதிமுக ஆதரிக்கும்.
ஜி.கே மணி (பா.ம.க,. );
திட்டத்தில் மாற்றுக்கருத்து இருப்பதில் தவறு இல்லை. சிங்கப்பூர் துறைமுகத்திற்கு இணையாக தூத்துக்குடி துறைமுகம் வளர்ச்சி பெறும். சென்னையில் இருந்து மற்ற நாடுகளுக்கு கப்பல் போக்குவரத்து அதிகரிக்கும். எரிபொருள் சிக்கனம் ஏற்படும். ஏற்றுமதி , இறக்குமதி அடிப்படையில் அன்னிய செலாவணி அதிகரிக்கும்.
அமைச்சர் தங்கம் தென்னரசு:
மணிமகுடத்தில் ஒரு வைரமாக இந்த தீர்மானத்தை முதல்வர் முன்மொழிந்துள்ளார். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக , பூம்புகார், முசிறி, உள்ளிட்ட துறைமுகங்கள் நமது முன்னோர்கள் கடல் வாணிகம் செய்த வரலாற்றை காட்டுகிறது.
கப்பலுக்கு 20 வெவ்வேறு பெயர்கள் உள்ளன. நவீன காலத்தில் கடல் வாணிபம் செழிக்க வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்படும் இந்த திட்டம் நாட்டுக்கு பயனுள்ளதாகும். இதனை மீண்டும் கொண்டு வருவது குறித்த முடிவை நான் பாராட்டுகிறேன். இவ்வாறு விவாதம் நடந்தது.
விவாதத்தின் முடிவில் அனைத்து உறுப்பினர்கள் ஆதரவுடன் ஏகமனதாக முதல்வர் கொண்டு வந்த சேதுசமுத்திர திட்ட தனித்தீர்மானம் நிறைவேறியது.