பெங்களூரு: கர்நாடகாவில் பிரதமர் மோடியின் பேரணியின்போது அனைத்து பாதுகாப்பு வளையத்தையும் தாண்டி சிறுவன் பிரதமருக்கு மாலை அணிவிக்க அருகில் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பாதுகாவலர்கள் சிறுவனை தடுத்து நிறுத்தினர்.
கர்நாடகா மாநிலம் ஹூப்பள்ளியில் நடைபெறும் இளைஞர் தின விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வருகை தந்துள்ளார். அங்குள்ள தார்வாட் விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு பிரதமர் பேரணியாக சென்றார்.
காரின் கதவை திறந்து பக்கவாட்டில் நின்றபடி தொண்டர்களை பார்த்து கையசைத்தவாறு வந்தார். அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பிரதமர் மோடியின் அருகில் அனைத்து பாதுகாப்பு வளையத்தையும் தாண்டி இளைஞர் ஒருவர் பிரதமருக்கு மாலை அணிவிக்க ஓடி வந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக சுதாரித்துக்கொண்ட பாதுகாவலர்கள், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தி இழுத்து சென்றனர். பா.ஜ., ஆளும் மாநிலத்திலேயே பிரதமரின் பேரணியில் இவ்வளவு பெரிய பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.
பாதுகாப்பு வளையத்தை மீறி பிரதமர் மோடிக்கு மாலை அணிவிக்க வந்த இளைஞரை பிடித்து கர்நாடக போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.