வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
சென்னை: கவர்னர் மாளிகையில் நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்காமல் திமுக புறக்கணித்துள்ளது. அதிமுக சார்பில் பழனிசாமி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள், ஓபிஎஸ் அணியினர், பா.ஜ., சார்பில் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கவர்னர் மாளிகையில், ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழா நடக்கும். இவ்விழாவில் பங்கேற்க, முதல்வர், அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள், நீதிபதிகள் ஆகியோருக்கு அழைப்பிதழ் அனுப்பப்படும்.
இம்முறை முதல் முறையாக, கவர்னர் ரவி உத்தரவின்படி, ஆதீனங்கள், கிறிஸ்துவ பிஷப்புகள், முஸ்லிம் மத குருமார்கள், விவசாயிகள், பழங்குடியின மாணவர்கள், சிறப்பாசிரியர்கள், போன்றோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
இதுதவிர வழக்கம்போல், முதல்வர், அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள், நீதிபதிகள் என, 1,800க்கும் மேற்பட்டோர் விழாவுக்கு அழைக்கப்பட்டனர். கவர்னர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், கரகாட்டம், சிலம்பாட்டம் என தமிழகத்தின் கிராமிய கலைஞர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில் திமுக சார்பில் யாரும் பங்கேற்காமல் புறக்கணித்தனர். இந்த அழைப்பிதழில் 'தமிழ்நாடு ஆளுநர்' என்பதற்கு பதிலாக 'தமிழக ஆளுநர்' எனக்குறிப்பிட்டும், தமிழக லட்சினையை தவிர்த்து இந்திய அரசு லட்சினையை வைத்தும் அழைப்பு விடுத்திருந்தார்.
இது சர்ச்சையானது. இதற்காகவும், சமீபத்தில் 'தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்பதே சரி' என்ற கவர்னரின் கருத்துகள் உள்ளிட்ட காரணங்களுக்காக திமுக புறக்கணித்ததாக கூறப்படுகிறது.
அதிமுக சார்பில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் அன்பழகன், செல்லூர் ராஜூ, ஓ.எஸ்.மணியன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோரும், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் வைத்திலிங்கம், பா.ஜ., சார்பில் வானதி சீனிவாசன் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.
Advertisement