ஊட்டி:நாட்டில் வரும், 2030க்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம், 5 லட்சம் 'மெகாவாட்' மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் மத்திய அரசின் எரிசக்தி தொடர்பான பார்லிமென்ட் நிலைக்குழு ஆய்வு கூட்டம் நடந்தது.
இதில், நிலைக்குழு தலைவர் ஜெகதாம்பிகா பால் பேசியதாவது:
நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை செயல்படுத்துவதில், இந்திய சூரிய சக்தி மின்சார கழகம் சிறப்பாக செயல்படுகிறது.
நாட்டில் வரும், 2030க்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம், 500 ஜிகாவாட்(5 லட்சம் மெகாவாட்) மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதை எட்டுவதற்கான முழு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி செய்வதற்கு அதிக முக்கியத்துவம் அளித்து ஊக்குவித்து வருகிறது.
இதனால், சூரிய சக்தி மின்உற்பத்தியில் சர்வதேச அளவில் இந்தியா மூன்றாமிடத்தில் உள்ளது.
சூரியசக்தி மின் உற்பத்தியில் அரசு நிர்ணயித்த, 62 'ஜிகாவாட்' என்ற இலக்கை மிஞ்சி, 100 'ஜிகாவாட் - - 1' லட்சம் மெகாவாட் அளவை எட்டி சாதனை படைத்துஉள்ளது.
காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்வதில் சர்வதேச அளவில் இந்தியா இரண்டாமிடம் வகிக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.