திருநெல்வேலி:முறப்பநாடு மற்றும் முத்தாலங்குறிச்சியில் தாமிரபரணி ஆற்றுப் படுகையில் கிடைத்த மூன்று சிலைகள் திருநெல்வேலி அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டன.
துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே முத்தாலங்குறிச்சி தாமிரபரணி ஆற்றுப்படுகையில் 3 அடி உயரம், 4அடி அகலம் உள்ள நந்தி கற்சிலை கண்டெடுக்கப்பட்டது.
இதன் காலம் 16ம் நுாற்றாண்டாகும். அதே பகுதியில் பெண் பக்தை கற்சிலையும் கண்டெடுக்கப்பட்டது.
முறப்பநாடு கோவில்பத்து படிகையூர், கைலாசநாதர் கோவில் முன் தாமிரபரணி ஆற்றில் பித்தளையில் ஆன கருமாரி அம்மன் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது 45 செ.மீ. உயரம், 13.800 கிலோ எடையும் உள்ளது. இதன் காலம் 18ம் நுாற்றாண்டாகும்.
மீட்கப்பட்ட சிலைகளை துாத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ், திருநெல்வேலி அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைப்பதற்காக அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசத்தியவள்ளியிடம் ஒப்படைத்தார்.
சப் - கலெக்டர் கவுரவ்குமார், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராஜ், முனைவர் கந்தசுப்பு இருந்தனர்.