தஞ்சாவூர்:கும்பகோணம் அருகே இடப் பிரச்னையில் ஏற்பட்ட தகராறில், பா.ம.க., முன்னாள் நிர்வாகியை வெட்டிக்கொலை செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரை, போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சோழபுரம், மேலானமேட்டைச் சேர்ந்தவர் திருஞானசம்பந்தம், 51; பா.ம.க., பேரூர் நகர முன்னாள் தலைவரான அவர், அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரின் நிலத்தில், குத்தகைக்கு விவசாயம் செய்து வந்தார்.
அந்த நிலத்திற்கு குத்தகையை முறையாக செலுத்தாததால், நிலத்தின் உரிமையாளர், தன் நிலத்தை, ராஜேந்திரன், 55, என்பவரிடம் விற்பனை செய்து விட்டார்.
இதனால், ராஜேந்திரனுக்கும், திருஞானசம்பந்தத்திற்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது. கடந்த ஆகஸ்டில், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், ராஜேந்திரனும், அவரது மகன்களும் திருஞானசம்பந்தத்தை தாக்கி கொலை செய்ய முயன்றனர்.
இது குறித்து, சோழபுரம் போலீசார், கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, ராஜேந்திரன் அவரது மகன்கள் உள்ளிட்டோரை கைது செய்தனர். சமீபத்தில், அவர்கள் ஜாமினில் வெளியே வந்தனர்.
இந்நிலையில், கடந்த, 10ம் தேதி காலை, வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த திருஞானசம்பந்தத்தை, ராஜேந்திரனும், அவரது மகன்களும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்து தலைமறைவாகினர்.
இந்நிலையில், அணைக்கரை பகுதியில் தலைமறைவாக இருந்த ராஜேந்திரன், 18 வயதுக்கு உட்பட்ட இரண்டு மகன்கள், மகள் விஷ்ணுப்பிரியா, 23, அவரது கணவர் ராஜா, 26, ஆகிய ஐந்து பேரையும், நேற்று முன்தினம் இரவு, போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.