வால்பாறை:வால்பாறை - சாலக்குடி ரோட்டில் தும்பிக்கை இல்லாமல் நடமாடும் குட்டி யானை குறித்து, கேரள வனத்துறையினர் கண்காணிக்கின்றனர்.
கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், சாலக்குடி - வால்பாறை ரோட்டில் யானைகள் தனித்தனி கூட்டமாக வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன.
இந்த வழித்தடத்தில், அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளால், சுற்றுலா பயணியர் அதிக அளவில் செல்கின்றனர்.
இந்நிலையில், அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகே வனப்பகுதியில், ஒரு குட்டியுடன் ஐந்து யானைகள் முகாமிட்டுள்ளன.
இந்த கூட்டத்தில் தாய் யானையுடன் தும்பிக்கை இன்றி, குட்டி யானை ஒன்று உலா வருவதை கேரள வனத்துறையினர் கண்டறிந்தனர்.
தும்பிக்கை இல்லாத குட்டி யானையின் வீடியோ, சமூக வலைதலங்களில் பரவி வருகிறது. கேரள வனத்துறையினர் கூறுகையில், 'குட்டி யானைக்கு பிறவியிலேயே தும்பிக்கை இல்லாமல் இருந்திருக்கலாம் அல்லது பிற வன விலங்குகள் தாக்கியதில் தும்பிக்கை இழந்திருக்கலாம்.
'ஆனால், குட்டி யானை ஆரோக்கியத்துடன், தாய் யானையுடன் உலா வருகிறது. அந்த யானையின் நடமாட்டம் குறித்து தொடர்ந்து கண்காணிக்கிறோம்' என்றனர்.