சேலம்:பெண்ணை பலாத்காரம் செய்ததாக, சிறை வார்டன் இருவரை போலீசார் கைது செய்தனர்.
சேலம், அழகாபுரத்தைச் சேர்ந்த, 20 வயது பெண், அஸ்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகார்:
சேலம் மத்திய சிறையில் வார்டன்களாக பணிபுரியும் இருவர், சேலம் அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு பாதுகாப்பு வழங்கினர்.
அங்கு நான் சிகிச்சைக்கு சென்ற போது, அவர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. சிறை வளாக குடியிருப்புக்கு அழைத்துச் சென்று, என்னை பலாத்காரம் செய்தனர்.
அப்போது 'போட்டோ, வீடியோ' எடுத்தனர். அதை வைத்து மிரட்டி, என்னை தொடர்ந்து பலாத்காரம் செய்ய முயற்சிக்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இதையடுத்து, உதவி கமிஷனர் லட்சுமிபிரியா தலைமையில் போலீசார் விசாரித்தனர்.
போலீசார் கூறியதாவது:
மத்திய சிறை வார்டன்களாக பணிபுரியும், கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துாரைச் சேர்ந்த அருண், 30, சேலம் மாவட்டம், உத்தமசோழபுரத்தைச் சேர்ந்த சிவசங்கர், 31, ஆகியோர், அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர்.
இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். சிறைக் காவலர் குடியிருப்பில் சிவசங்கர் குடும்பத்துடனும், அருண் தனியாகவும் வசிக்கின்றனர்.
இவர்கள், அந்த பெண்ணிடம், சமூக வலைதளங்கள் மூலம் பழக்கத்தை தொடர்ந்தனர். இதன் மூலம் அந்த பெண்ணை, சிறைக் குடியிருப்புக்கு அழைத்துச் சென்று, அங்கு காலியாக உள்ள வீட்டில், பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
அப்போது வீடியோ எடுத்து, அதை வைத்து மிரட்டி, பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
வார்டன் இருவருக்கும் சேலம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, இருவரும் கைது செய்யப்பட்டனர்.
புகார் அளித்த பெண், ஓமலுாரில், 2017ல் 'பஸ் டிரைவர், கண்டக்டரால்' கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானவர் என்பதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஓமலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.