ஜனவரி 13, 1946
சிவகங்கையில், ராமதாஸ் - ஞானாம்பாள் தம்பதிக்கு மகனாக, 1946ல் இதே நாளில் பிறந்தவர் பாலச்சந்திரன். அழகப்பா பல்கலை, திருப்பதி மற்றும் பாரதிதாசன் பல்கலைகளில் படித்து முனைவர் பட்டம் பெற்றார். ராசிபுரம் அரசு கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றினார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தில், ஆங்கில துறை தலைவராகவும், பேராசிரியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
'வானம்பாடிகள்' இயக்கத்தில் சேர்ந்து, 'பாலா' என்ற புனைப் பெயரில், புதுக்கவிதை படைப்பது, படிப்பது என, தன் படைப்பாற்றலை வெளிப்படுத்தினார். புதுக்கவிதைக்காகவே, 'சுவடு' என்ற இதழை துவக்கினார். அதில், படைப்பிலக்கியங்களை திறனாய்வு செய்து, எழுத்தாளர்களை மேம்படுத்தினார். சாகித்ய அகாடமியின், தமிழ் அறிவுரை குழு ஒருங்கிணைப்பாளராகி, பல புதுக்கவிஞர்களை அறிமுகப்படுத்தினார்.
ராஜம் கிருஷ்ணனின் புதினங்கள், மீரா, மேத்தா, சிற்பியின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். கவிஞர்களை வளர்த்த கவிஞரான பாலா, 2009 செப்டம்பர் 22ல் தன், 63வது வயதில் மறைந்தார்.
இனம் காணா சோகம், ஆச்சர்யமான உத்தி, அசைபோட வைக்கும் ஆழம், இதழ் விரிக்கும் புன்னகையை, கவிதைகளால் பந்தி வைத்த, கவிஞர் பாலாவின் பிறந்த தினம் இன்று!