கோவை:சொந்த மகளை பாலியல் பலாத்காரம் செய்த, காமக்கொடூர தந்தைக்கு ஆயுள் சிறை விதித்து, கோவை மகளிர் கோர்ட் நேற்று தீர்ப்பு வழங்கியது.
திருநெல்வேலி மாவட்டம், வி.கே.புரத்தைச் சேர்ந்த 50 வயது நபர், கோவை மாவட்டம், வால்பாறை எஸ்டேட்டில், மனைவி, மகளுடன் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார்.
முதல் மனைவியை விவாகரத்து செய்த இவர், சொந்த ஊருக்கு சென்று, வேறு ஒரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்தார். முதல் மனைவி மற்றும் அவரது மகள் வால்பாறையில் குடியிருந்து வந்தனர்.
இந்நிலையில், 2012ல், முதல் மனைவியின், 17 வயது மகள், தந்தையை பார்க்க வி.கே.புரம் சென்றார். அங்கு சில மாதங்கள் தங்கியிருந்த போது, தன் மகளையே அந்த கொடூர தந்தை பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதுகுறித்து, அங்குள்ள போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பின், வால்பாறை போலீசுக்கு மாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து, அந்த நபரை கைது செய்த போலீசார், கோவை மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
விசாரணை நடந்து வந்த நிலையில், ஜாமினில் வெளிவந்த அவர், 2020ல் மும்பைக்கு தப்பினார். அவரை பிடிக்க வால்பாறை இன்ஸ்பெக்டர் கற்பகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இதற்கிடையே, ஆறு மாதங்களுக்கு முன், மும்பையிலிருந்து சொந்த ஊரில் நடந்த கோவில் திருவிழாவுக்கு வந்தபோது, அவரை போலீசார் மடக்கி பிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி நந்தினிதேவி, மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு ஆயுள் சிறை, 2,500 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.